பெண்ணாடம்,-பெண்ணாடத்தில் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிக்கு வந்த ஆண் மான் நாய்கள் கடித்ததில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தது.
பெண்ணாடம் மற்றும் சுற்றியுள்ள திருமலை அகரம், மாளிகைக்கோட்டம், அரியராவி உள்ளிட்ட காடுகள், ஏரிகளில் ஏராளமான மான்கள் கூட்டமாக வசிக்கின்றன. மான்களை வேட்டையாடும் விலங்குகள் இப்பகுதியில் இல்லாததால் நாளுக்கு நாள் மான்களின் எண்ணிக்கை அதிகமாகிறது.
தற்போது கோடை காலம் துவங்கியுள்ள நிலையில் மான்கள் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் வருவது வழக்கம்.
அதன்படி, பெண்ணாடம், சுமைதாங்கி குடியிருப்பு பகுதிக்கு நேற்று மாலை 6:00 மணியளவில் 3 வயது ஆண் மான் ஒன்று தண்ணீர் தேடி வந்தது. அதனை நாய்கள் விரட்டி கடித்ததால் துடிதுடித்து மான் இறந்தது.
தொடர்ந்து அப்பகுதி மக்கள் விருத்தாசலம் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். பின்னர் மானின் உடலை கைப்பற்றிய வனத்துறையினர் பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் அடக்கம் செய்தனர்.