ஊட்டி: ''பழங்குயினரின் ஜாதி சான்றிதழ் சரி பார்ப்பது தொடர்பாக, 2,600 மனுக்கள் பெறப்பட்டு, 2,000 சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது,'' என, டி.ஜி.பி., சைலேந்திரபாபு தெரிவித்தார்.
பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் சரிபார்த்தல் தொடர்பாக மாநிலத்தில் உள்ள, 37 மாவட்ட ஏ.டி.எஸ்.பி.,க்கள் மற்றும் ஒன்பது மாநகர கமிஷனர்களுக்கு நீலகிரி மாவட்டம், ஊட்டி பழைய எஸ்.பி., அலுவலத்தில் இரண்டு நாள் பயிற்சி முகாம் துவங்கியது.
அதனை, டி.ஜி.பி., சைலேந்திரபாபு துவக்கி வைத்து பேசுகையில், ''கடந்த ஆண்டு மாநிலத்தில் பல்வேறு பிரச்னை தொடர்பாக, 9.70 லட்சம் மனுக்கள் பெறப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. பழங்குடியின மக்களிடம், 75 மனுக்கள் பெறப்பட்டு வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஜாதி சான்றிதழ் சரி பார்ப்பது தொடர்பாக, 2,600 மனுக்கள் பெறப்பட்டு, 2,000 சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பழங்குடியின மாணவர்கள் மேல்படிப்பு படிப்பதற்கும், அரசு வேலைகளில் சேரவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது,''என்றார். தொடர்ந்து, ஊட்டி பி-1 காவல் நிலையம் சென்று அங்கு போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில், பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை, காவல்துறையின் சமூகநீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு மாநில தலைவர் ஐ.ஜி., பிரபாகரன், பழங்குடியினர் ஆய்வு மைய இயக்குனர் டாக்டர் உதயகுமார், நீலகிரி எஸ்.பி., பிரபாகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.