விழுப்புரம்:''தமிழகத்தில், கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற தி.மு.க.,வின் பொய் வாக்குறுதியை நம்பிய வங்கிகள், மாணவர்கள் தவிக்கின்றனர்,'' என பா.ஜ., மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி கூறினார்.
விழுப்புரம் மாவட்ட பா.ஜ., அலுவலகத்தில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழர்களின் கலாசாரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில், பார்லிமென்டின் புதிய கட்டடத்தில் தமிழகத்திலிருந்து வழங்கப்பட்ட செங்கோல் வைக்கப்பட உள்ளது.
இதை உணராமல், அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கப் போவதாக, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளது வருத்தம் அளிக்கிறது.
பிரதமர் மோடி மீதுள்ள காழ்ப்புணர்ச்சியால், இவர்கள் மலிவான அரசியல் செய்கின்றனர்.
கள்ளச்சாராயத்தால் தமிழகத்தில் 22 பேர் இறந்துள்ளனர். தமிழக அரசு செயல்பாடின்றி துாங்குகிறது.
இப்போது தான் பல இடங்களில், மதுபான பார்களுக்கு 'சீல்' வைக்கப்படுகிறது.
ஏற்கனவே, தமிழக முதல்வர் துபாய் சென்று வந்த பிறகு எந்த வித வெளிநாட்டு முதலீடும் வரவில்லை. அதற்குள், சிங்கப்பூர் போவதன் அவசியம் தெரியவில்லை.
தமிழ்க்கடவுள் முருகரை அவமதிக்கும் வகையில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
ஹிந்துக்கள் மனதை புண்படுத்தும் நோக்கத்தில் இவர்கள் தொடர்ந்து செயல்படுகின்றனர்.
கர்நாடகாவில் பல்வேறு பொய் வாக்குறுதிகள் அளித்து காங்., ஆட்சிக்கு வந்துள்ளது.
அதுபோல, தமிழகத்தில் கல்விக் கடனை தள்ளுபடி செய்வதாக அளித்த வாக்குறுதியை தி.மு.க., அரசு நிறைவேற்றாததால், கல்விக் கடன் வாங்கிய மாணவர்களும், கடன் வழங்கிய வங்கி நிர்வாகமும் தவிக்கின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.