உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:...
க.ஸ்ரீதர், கல்லிடைக்குறிச்சி, நெல்லை மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கள்ளச்சாராயம் குடித்த, 23 பேர் பலியாகி உள்ளனர். அவர்களின் குடும்பத்திற்கு, தலா, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளார், முதல்வர் ஸ்டாலின்.
![]()
|
'அரசியல் கட்சிகள், 'பந்த்' நடத்தும் போது, பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால், அந்த சேதங்களுக்கு சம்பந்தப்பட்ட கட்சிகளே பொறுப்பேற்க வேண்டும். அந்த கட்சிகளிடம் இருந்து இழப்பீடு வசூலிக்க வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பை கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரத்திலும், தமிழக அரசு பின்பற்ற வேண்டும்.
விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நிகழ்ந்த கள்ளச்சாராய பலிகளுக்கு, அவற்றை காய்ச்சி விற்றவர்களும், அவர்களுக்கு துணை போன போலீசாரும், உயர் அதிகாரிகளும் தானே பொறுப்பு. அதனால், உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க, சாராயம் விற்றவர்கள் மற்றும் அவற்றை தடுக்கத் தவறிய போலீஸ் அதிகாரிகளிடம் இருந்து தான், இழப்பீட்டுத் தொகையை வசூலிக்க வேண்டும்.
'கள்ளச்சாராயம் விற்போர், குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர்' என, அறிவித்துள்ள தமிழக அரசு, சாராய பலிகளுக்கு யார் காரணமோ, அவர்களிடம் இருந்தே இழப்பீடு வசூலிக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிடுவதோடு, அதற்கான சட்டத்தையும் இயற்ற முன்வந்தால், சட்டவிரோத சாராய விற்பனை தானாக முடிவுக்கு வந்து விடும்.
![]()
|
முடிந்தால், கள்ளச்சாராயம் விற்றவர்கள் மற்றும் அவர்களுக்கு துணை போன போலீஸ் அதிகாரிகளின் சொத்துக்களை பறித்து, அவற்றை விற்று, இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கலாம்.
மக்களின் வரிப் பணத்தை, அவசியமானவற்றுக்கு மட்டுமே செலவிட வேண்டும். 'அடுத்தவன் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே' என்பது போல, வேண்டுமென்றே தப்பு செய்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு வாரி வழங்குவது சரியான அணுகுமுறையல்ல. நிதிப் பற்றாக்குறையில் மாநிலம் தவிக்கும் நிலையில், தேவையற்ற நிவாரணங்களை தவிர்ப்பதே நல்லது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement