வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
த.மா.கா., இளைஞரணி தலைவர் யுவராஜா: மாநிலத்தை திறம்பட செயல்படுத்த முதல்வரும், மாவட்டங்களுக்கு கலெக்டர், எஸ்.பி., உள்ளிட்ட பல அதிகாரிகளும் உள்ளனர். அவர்களை வைத்து வளர்ச்சி பணிகளை கவனிப்பதை தவிர்த்து, மாவட்டத்துக்கு பொறுப்பு அமைச்சர் என, ஏன் சிலரை நியமிக்க வேண்டும். மாவட்டத்தின் ஊழல் வருவாயை தலைமையிடம் கொண்டு சேர்ப்பதை, அவர்களது பணியாக வைத்துக் கொள்ளவா?
![]()
|
டவுட் தனபாலு: மாவட்டத்தின் ஒட்டுமொத்த அதிகாரத்தையும் அதிகாரிகள் வசம் தந்துட்டா, ஆளுங்கட்சியினருக்கு என்ன மரியாதை இருக்கும்... மாவட்ட செயலர் தலையிட்டா, விமர்சனங்கள் வரும் என்பதால் தான், 'மாண்புமிகு'க்களை அனுப்பி, 'லகானை' தங்களது கையில வச்சுக்கிறாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
பத்திரிகை செய்தி: கள்ளச்சாராய உயிரிழப்பு விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளதால், 'டாஸ்மாக்' மது கடைகள் செயல்படும் நேரத்தை குறைக்க, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, மதியம், 12:00 மணிக்கு திறக்கப்படும் கடைகளை பிற்பகல், 1:00 மணி முதல் திறக்கலாமா; இரவு, 10:00 மணிக்கு மூடுவதை, 9:00 மணிக்கு மூடலாமா என, ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
![]()
|
டவுட் தனபாலு: இந்த முடிவால, சட்டவிரோதமா மது விற்பனை செய்றவங்களுக்கு, கூடுதலா இரண்டு மணி நேரம் அமோகமா வியாபாரம் நடக்கும் என்பதை தவிர, வேற எந்த மாற்றமும் நடந்துடாது என்பதில், 'டவுட்'டே இல்லை!
தி.மு.க., - எம்.பி., கனிமொழி: கடன்களை திருப்பி செலுத்தாத, 'கார்ப்பரேட்'களுக்கு கோடிக்கணக்கில் கடன் வழங்கும் வங்கிகள், சிறு, குறு நிறுவனங்களுக்கு, 50 லட்சம் ரூபாய் கடன் வழங்க சிந்திக்கின்றன. இதேபோல ஏராளமான பிரச்னைகளை, சிறு தொழில் நிறுவனங்கள் எதிர்கொள்கின்றன. அதுகுறித்து, பார்லிமென்டில் பேசுவேன்.
டவுட் தனபாலு: பார்லிமென்ட்ல, தி.மு.க., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், முக்கால்வாசி நாட்கள் அமளியில ஈடுபட்டு, சபை நடவடிக்கைகளை முடக்கிடுறீங்க... இல்லேன்னா, மத்திய அரசை கண்டிச்சு, வெளிநடப்பு பண்ணிடுறீங்க... இதுல, எங்க இருந்து சிறு தொழில் நிறுவனங்கள் பிரச்னைகளை பேசுவீங்க என்ற, 'டவுட்'தான் வருது!
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement