வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
''அவர் போனதும் தான், நிம்மதி பெருமூச்சு விட்டாங்க...'' என்றபடியே, பெஞ்சில் அமர்ந்தார் அந்தோணிசாமி.
''யாரு, எங்க வே போனா...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
![]()
|
''தமிழக வேளாண் துறை இயக்குனரா இருந்த அண்ணாதுரையை, சமீபத்துல வேற துறைக்கு மாத்தினாங்க... ஆனா, துறை அமைச்சர் பன்னீர்செல்வத்துக்கு அவர், 'பிட்' ஆகிட்டதால, அவரது இடமாறுதலை தடுக்க, அமைச்சர் ரொம்பவே போராடினாருங்க...
''அண்ணாதுரை இருந்தப்ப, விவசாயத்துக்கும், விவசாயிகளுக்கும் தேவையில்லாத பல திட்டங்களை, களப் பணியாளர்கள் வாயிலா செயல்படுத்தினாராம்... இதனால, 'அவரை எப்படா மாத்துவாங்க'ன்னு விவசாய சங்கத்தினர் காத்துட்டு இருந்தாங்க...
''அமைச்சர் தயவால, அவரது இடமாறுதல் ரத்தாகிடுமோன்னு பயந்தாங்க... கடைசியா, அமைச்சர் முயற்சி பலிக்காம, அண்ணா துரையை, 'ரிலீவ்' பண்ணிட்டதால, விவசாய சங்கத்தினர் உற்சாகம் ஆகிட்டாங்க...
''வேளாண்மை, தோட்டக்கலைத் துறை கள அலுவலர்கள், விவசாயிகளுக்கு தொழில்நுட்பத்தை கற்றுத் தரும் பணியை தான் செய்யணும்... அவங்களோ, விவசாய இடுபொருட்கள், உபகர ணங்களை விற்பனை செய்ற பிரதிநிதிகள் போலவே செயல்படுறாங்க... 'இதை புதிய இயக்குனர் சுப்ரமணியன் மாத்தணும்'னு, விவசாய சங்கத்தினர் சொல்றாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''கண்துடைப்புக்கு சோதனை நடத்திட்டு போயிட்டா ஓய்...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் குப்பண்ணா.
''எந்தச் சோதனையை சொல்றீங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சேலம் மாவட்டத்துல, 211 'டாஸ்மாக்' கடைகள் இருக்கு... இதுல, 47 கடைகள்ல மட்டும் அனுமதி பெற்று, 'பார்'கள் நடத்தறா ஓய்...
''மற்ற இடங்கள்ல, ஆளுங்கட்சியினர் ஆசியோட சட்டவிரோத பார்கள் தான் நடக்கறது... லோக்கல் போலீசார் மற்றும் டாஸ்மாக் அதிகாரிகளுக்கு, 'கட்டிங்' குடுத்து, இந்த பார்களை நடத்தறா ஓய்...
''சமீபத்துல, தஞ்சாவூர் பார்ல மது குடிச்சு ரெண்டு பேர் இறந்து போயிட்டாளே... உடனே, சேலம் மாவட்ட டாஸ்மாக் அதிகாரிகள், போலீசார் சேர்ந்து, பார்கள்ல அதிரடி சோதனை நடத்தினா ஓய்...
''ஆனா, சட்டவிரோத பார்களை நடத்தியவா, கடைகளை மூடிட்டு, 'எஸ்கேப்' ஆயிட்டா... அதிகாரிகளும் பெயரளவுக்கு சோதனை நடத்திட்டு, பிளாட்பார டிபன் கடைகள், சிக்கன் கடை வியாபாரிகளிடம், 'இங்க வச்சு யாரையாவது மது குடிக்க, 'அலவ்' பண்ணினா, உள்ள துாக்கி போட்டுடுவோம்'னு மிரட்டிட்டு போயிட்டா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''கம்யூ., கட்சி கட்டப் பஞ்சாயத்தை கேளுங்க வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளால, 72 வருஷத்துக்கு முன்னாடி துவங்கப்பட்ட நிறுவனம், 'நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்' என்ற பதிப்பகம்... சென்னை, அம்பத்துார்ல இருக்கு வே...
''வருஷத்துக்கு, 25 கோடி ரூபாய்க்கு மேல வர்த்தகம் நடக்கிற இந்த நிறுவனத்துக்கு, பல கோடி ரூபாய்க்கு சொத்துக்களும் இருக்கு... இவ்வளவு சொத்து இருந்தா, பிரச்னை வராம இருக்குமா...
![]()
|
''இதன் இயக்குனரா சண்முகம் சரவணன் இருக்காரு... நிறுவனம் யாருக்கு சொந்தம்னு, இந்திய கம்யூ., மாநில செயலர் முத்தரசன் தரப்புக்கும், சண்முகம் தரப்புக்கும் முட்டல், மோதல் நடக்கு... சமீபத்துல நடந்த தகராறுல, கைகலப்பு நடக்கிற அளவுக்கு மோசமாயிட்டு... தொடர் மிரட்டல் காரணமா, சண்முகம் தலைமறைவாயிட்டாரு வே...
''கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, தன் வசமிருந்த பங்கு களை, சமீபத்துல இயக்குனர் சண்முகம் தரப்புக்கு எழுதி குடுத்துட்டாராம்... இதனால, அவர் மேலயும், முத்தரசன் தரப்பு கடுப்புல இருக்கு வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
அரட்டை முடிய அனைவரும் கிளம்பினர்
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement