வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கடலுார் மாவட்டம் பண்ருட்டி அடுத்த எல்.என்.புரம் சென்னை சாலையில் டூ-வீலர் மெக்கானிக் ஷாப் வைத்திருப்பவர் ரவி. இவரது மகள் ரம்யா 29. இவரின் ஒர்க் ஷாப்பில் ஆர்.எஸ்.மணி நகரை சேர்ந்த சக்கரபாணி மகன் சுப்ரமணியன் 31 மெக்கானிக் ஆக வேலை பார்த்தார்.
ரம்யாவை காதலித்த சுப்ரமணியன் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பல முறை உல்லாசமாக இருந்தார். மார்ச் 27ம் தேதி சுப்ரமணியனுக்கும் கடலுார் பாதிரிக்குப்பம் பகுதியை சேர்ந்த பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயத்தார்த்தம் நடந்தது. இதை அறிந்த ரம்யா, சுப்ரமணியன் மீது கடலுார் எஸ்.பி. அலுவலகத்தில் புகார் அளித்தார். புகாரை வாபஸ் பெற்றால் திருமணம் செய்து கொள்வதாக சுப்ரமணியன் கூறியதால் ரம்யா வாபஸ் பெற்றார்.
மே 22ம் தேதி சுப்ரமணியன் - ரம்யாவுக்கு விழுப்புரத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. சுப்ரமணியனுக்கு பாதிரிகுப்பத்தை சேர்ந்த அந்த பெண்ணுடன் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோவிலில் நேற்று திருமணம் செய்ய மீண்டும் ஏற்பாடு நடந்தது. இதையறிந்த ரம்யா நேற்று முன்தினம் இரவு பண்ருட்டி மகளிர் போலீசில் புகார் அளித்தார்.
இரவு 10:30 மணிக்கு சுப்ரமணியன் வீட்டின் முன் ரம்யா நியாயம் கேட்டு தர்ணாவில் ஈடுபட்டார். பண்ருட்டி மகளிர் போலீசார் பேச்சு நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியதை ஏற்று நேற்று அதிகாலை 2:00 மணிக்கு போராட்டத்தை கைவிட்டார்.
போலீசார் சுப்ரமணியனை தேடி வந்த நிலையில் திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவிலில் நடைபெற இருந்த திருமணம் கடலுார் மஞ்சக்குப்பம் மாரியம்மன் கோவிலுக்கு மாற்றப்பட்டது. அங்கு விரைந்த பண்ருட்டி மகளிர் காவல் நிலைய போலீசார் திருமணத்திற்கு பின் மணக்கோலத்தில் இருந்த சுப்ரமணியனை நேற்று காலை 11:30 மணிக்கு கைது செய்தனர்.
போதையில் வந்த மகனை குத்திக் கொன்ற தந்தை கைது
கடலுார் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கொடிக்களம் அருந்ததியர் காலனியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் 60. இவருக்கு இரண்டு மகன் இரண்டு மகள்கள். மூத்த மகன் விநாயகம், 28, வேலைக்கு செல்லாமல் மது குடித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு போதையில் வீட்டுக்கு வந்த விநாயகத்தை தந்தை ஆறுமுகம் தட்டிக்கேட்டார். அப்போது அவரும் போதையில் இருந்தார்.
இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பானது. ஆத்திரமடைந்த ஆறுமுகம் வீட்டிலிருந்த கத்தியை எடுத்து மகனின் இடது பக்க மார்பில் குத்தியதில் சம்பவ இடத்திலேயே இறந்தார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் விநாயகத்தின் உடலை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடு செய்தனர். விநாயகம் மாரடைப்பால் இறந்து விட்டதாக தகவலையும் பரப்பினர்.
தகவலறிந்த திட்டக்குடி போலீசார் நேற்று காலை விநாயகத்தின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது தந்தை - மகன் இடையே ஏற்பட்ட தகராறில் விநாயகம் கொலை செய்யப்பட்டதை உறுதி செய்த போலீசார் ஆறுமுகத்தை கைது செய்தனர்.
பெண் காலில் விழுந்து மன்னிப்பு கேட்ட திருடன்
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் சவுந்தரராஜன், 59; பெட்டிக்கடை நடத்தி வருகிறார். சவுந்தரராஜன் கடைக்கு சென்று விட்ட நிலையில், அவரது மனைவி ரேகா திருமண நிகழ்ச்சிக்கு சென்றார். வீட்டில், அவர்களின் மகள் சோனா, 19, நேற்று தனியாக இருந்த போது, முகமூடி அணிந்த இரண்டு பேர், பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். அவர்கள், சோனா கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, பீரோ சாவியை வாங்கினர்.
பீரோவில் வைத்திருந்த, 16.5 சவரன் நகைகள், வெள்ளி கொலுசுகள், 9,500 ரூபாய் ஆகியவற்றை திருடிக் கொண்டனர். பின், சோனா அணிந்திருந்த செயினை கழற்றி வாங்கிக் கொண்டனர். காதில் இருந்த தோடுகளை கழற்ற முயன்ற போது, 'தோடுகளை கழற்ற வேண்டாம், அதை நீயே வச்சுக்க' என திருடர்கள் கூறியுள்ளனர்.
அதில் ஒருவன், திடீரென சோனாவின் காலில் விழுந்து, 'என் அம்மாவுக்காக இந்த நகைகளை திருடிச் செல்கிறேன்; என்னை மன்னித்து விடு' என, கூறிவிட்டு, தப்பியோடினர். அதிராம்பட்டினம் போலீசார் விசாரிக்கின்றனர்.
மின் கம்பியை அகற்ற லஞ்சம்: அதிகாரி கைது
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த ஆலந்தாங்கலை சேர்ந்தவர் சக்திவேல் 45 புதியதாக வீடு கட்டி வருகிறார். வீட்டின் மேல் மின் கம்பி செல்வதால் அதை அகற்ற வெம்பாக்கம் உதவி மின் பொறியாளர் அஜீத் பிரகாஷ் என்பவரை அணுகினார்.அவர் அலுவலகத்திற்கு செலுத்த வேண்டிய 39 ஆயிரம் ரூபாயுடன் லஞ்சமாக 11 ஆயிரம் ரூபாய் கேட்டார். அந்த பணத்தை சக்திவேல் கொடுத்தார்.
ஆனாலும் அஜீத் பிரகாஷ் மின் கம்பியை அகற்றாமல் மேலும் 2000 ரூபாய் கேட்டு சக்திவேலை அலைக்கழித்தார். இதனால் சக்திவேல் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து நேற்று மதியம் உதவி மின் பொறியாளர் அஜீத் பிரகாஷ் அலுவலகத்தில் இருந்தபோது அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயன பொடி தடவி கொடுத்த 2000 ரூபாயை சக்திவேல் கொடுத்தார். அதை அஜீத் பிரகாஷ் பெற்றபோது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர்.
30 சிறுமியரை சீரழித்து கொன்ற கொலையாளிக்கு ஆயுள் தண்டனை
புதுடில்லியில் 2008ல் துவங்கி அடுத்தடுத்த ஆண்டுகளில், 12 வயதுக்கு உட்பட்ட சிறுமியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. இவை தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், 2015ல் ரவீந்திர குமார் என்பவரை கைது செய்தனர்.
இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், புதுடில்லியின் புறநகர் பகுதிகளில் வசித்து வரும் கூலித்தொழிலாளர்களின் குழந்தைகளை குறி வைத்து வேட்டையாடியது தெரியவந்தது. கடந்த ஏழு ஆண்டுகளில், 30 சிறுமியரை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற ரவீந்திர குமார் மீதான விசாரணை புதுடில்லி ரோகிணி நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இந்த வழக்கில், நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. இவர் பல குழந்தைகளை கொன்றிருந்தாலும், 6 வயது சிறுமி ஒருவரை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றத்திற்காக ரவீந்திரகுமாருக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
பெண்ணை கொன்று உடல் பாகங்களை 'பிரிஜ்'ஜில் மறைத்து வைத்தவர் கைது
தெலுங்கானாவின் ஹைதராபாதில் உள்ள மருத்துவமனையில் அனுராதா ரெட்டி,55, என்பவர் செவிலியராக வேலை செய்து வந்தார். கணவனை இழந்த இவர், சந்திரமோகன், 48, என்பவரின் வீட்டின் தரைத் தளத்தில் தனியாக வசித்து வந்தார்.
சந்திரமோகனுக்கு திருமணம் ஆகாத நிலையில், இருவரும் 15 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். இந்த பழக்கத்தில் சந்திரமோகனுக்கு, அனுராதா 7 லட்சம் ரூபாய் கடன் கொடுத்துள்ளார். இதை அனுராதா திருப்பிக் கேட்டதால் அவருடன் சந்திரமோகன் அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்நிலையில், 12ம் தேதி பணம் தொடர்பாக நடந்த தகராறில் அனுராதாவை, சந்திரமோகன் கத்தியால் குத்திக் கொலை செய்தார்.
பின், அவரின் தலையை தனியாக வெட்டி, முசி ஆற்றின் அருகே உள்ள குப்பைக் கிடங்கில் வீசினார். துப்புரவு பணியாளர்கள் அளித்த தகவலின் அடிப்படையில், தலையை கைப்பற்றிய போலீசார், அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவின் உதவியுடன் சந்திரமோகனை கண்டுபிடித்து விசாரணை நடத்தினர்.
அப்போது, அவரது வீட்டில் பிரிஜில் மறைத்து வைக்கப்பட்டிருந்த அனுராதாவின் உடல் பாகங்களை போலீசார் கைப்பற்றினர். போலீசார் நடத்திய விசாரணையில், கொலை செய்ததை ஒப்புக் கொண்டதை அடுத்து சந்திரமோகன் கைது செய்யப்பட்டார்.
தங்கையை கொன்ற 13 வயது சிறுமி கைது
பீஹாரின் வைஷாலி மாவட்டத்தில் உள்ள ஹர்பிரசாத் கிராமத்தில் வசித்து வரும் பெற்றோர், இரண்டு மகள்களை தனியாக விட்டுவிட்டு உறவினர் திருமணத்துக்காக சமீபத்தில் வெளியூர் சென்றனர். திரும்பி வந்த போது, வீட்டில் இளைய மகள் இல்லாததை அடுத்து, அவர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
இந்நிலையில் வீட்டருகே உள்ள வயல்வெளியில், முகம் சிதைக்கப்பட்ட நிலையில் இளைய மகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்து சகோதரியிடம் விசாரித்த போது, அவர் தன் 18 வயது காதலனுடன் சேர்ந்து தங்கையை கொன்ற அதிர்ச்சி தகவல் கிடைத்தது. இதையடுத்து, சிறுமி மற்றும் காதலன் கைது செய்யப்பட்டனர்.
காதலனுடன் உறவில் இருந்ததை பார்த்து விட்டதால், பெற்றோரிடம் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் தங்கையை கொலை செய்ததாக சிறுமி தெரிவித்துள்ளார். அடையாளத்தை மறைக்க, தங்கையின் முகத்தை அமிலத்தை ஊற்றி அழித்துள்ளார். இதையடுத்து கைதான சிறுமி, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டார்.
ஜப்பானில் பயங்கரம்; 3 பேர் கொலை
ஜப்பானின் நாகோனா நகரில், மக்கள் நடமாட்டம்அதிகம் உள்ள இடத்தில் நேற்று, ஒரு பெண்ணை, மர்ம நபர் ஒருவர் துரத்திச்சென்றார். சிறிது துாரம் சென்றதும் அந்த பெண்ணை, அவர் கத்தியால் குத்தினார்.
தகவல் கிடைத்ததும், போலீசார் அங்கு வந்தனர்.அவர்கள் மீது அந்த நபர் சரமாரியாக சுட்டார். இதில் இரண்டு போலீசார் உயிரிழந்தனர். அவர்களது துப்பாக்கியை பறித்த அந்த மர்ம நபர், அருகில் இருந்த கட்டடத்துக்குள் சென்று மறைந்து கொண்டார். அந்த கட்டத்தை போலீசார் சுற்றி வளைத்துள்ளனர். கத்தியால் குத்தப்பட்ட பெண்ணும், மருத்துவமனையில் உயிரிழந்தார்.