வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: 'கேந்திரிய வித்யாலயா மற்றும் சைனிக் பள்ளிகளிலும், தமிழ் பாடத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும்' என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக்கும் சட்டம், 2015 - 16ம் ஆண்டில் முழுமையாக அமலுக்கு வந்தது. ஆனால், 8ம் வகுப்பு வரை மட்டும் அது அமலானது; வரும் கல்வி ஆண்டில், 9 மற்றும் 10ம் வகுப்புக்கும், தமிழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில், தமிழகத்தில் செயல்படும், மத்திய அரசின் கல்வி நிறுவனங்களான, கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் மற்றும் ராணுவ துறையின் சைனிக் பள்ளிகளிலும், 10ம் வகுப்பு வரை தமிழை கட்டாயம் கற்பிக்க, மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. அதை அமல்படுத்துமாறு, அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் கூறியதாவது: தமிழக அரசு உத்தரவுப்படி, கே.வி., மற்றும் சைனிக் பள்ளிகளில், தமிழ் பாடத்தை கட்டாயமாக்குவது என்றால், அங்கு தமிழ் ஆசிரியர்களை நியமித்து, தமிழ் பாட வகுப்பு நடத்துவதை உறுதி செய்ய வேண்டும்.
தமிழ் பாட வேளையோ, ஆசிரியரோ இல்லாமல் இருக்க கூடாது. இதற்கான பாடத்திட்டம், தமிழக பள்ளிக்கல்வி துறையால் வழங்கப்படும். அரசு தேர்வுத் துறையால் தமிழ் தேர்வு நடத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.