வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: கோவையில், மளிகைக் கடைக்காரரிடம் 7 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பறித்த உணவுப் பாதுகாப்பு அலுவலர், புரோக்கர் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கோவை, வடவள்ளி, நவாவூரைச் சேர்ந்தவர் துரைசாமி, 78. அதே பகுதியில் மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் லாலிரோட்டிலுள்ள, உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாக அலுவலக அதிகாரி வெங்கடேஷ் சில நாட்களுக்கு முன் ஆய்வு செய்தார்; கடை லைசன்ஸ் காலாவதியாகி இருந்தது.

லைசன்சை புதுப்பித்து தர 20 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக வெங்கடேஷ் கேட்டுள்ளார். பின்னர் பேரம் பேசி, 7 ஆயிரம் ரூபாயாக குறைத்தார். 'லஞ்சம் தராமல் வேலை ஆகாது' என்ற நிலையில் மனம் வெறுத்த துரைசாமி, கோவை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். வழக்குப்பதிவு செய்த போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை துரைசாமியிடம் கொடுத்து அனுப்பினர்.
நேரடியாக லஞ்சம் வாங்கினால் சிக்கிக்கொள்வோம் என்ற முன்னெச்சரிக்கையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரி வெங்கடேஷ், புரோக்கர் பிரதாப் என்பவரை வாங்கச் சொன்னார். அந்த நபர், அலுவலகத்துக்கு வெளியே இருந்த பேக்கரிக்கு வருமாறு அழைத்து லஞ்ச பணத்தை பெற்றுக்கொண்டார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் புரோக்கரை கைது செய்தனர்; உணவுப்பாதுகாப்பு அலுவலர் வெங்கடேசும் கைது செய்யப்பட்டார்.
தொடருமா கைது?
கோவையிலுள்ள அரசுத்துறை அலுவலகங்களில் லஞ்சம் தாண்டவமாடுகிறது. 'லட்சம் லட்சமாக லஞ்சம் கொடுத்துத்தான் இப்பொறுப்புக்கு வந்திருக்கிறோம்' எனக்கூறும் அதிகாரிகள், பொதுமக்களிடம் வழிப்பறி செய்யாத குறையாக 'ரேட்' நிர்ணயித்து லஞ்சம் பறிக்கின்றனர்.
ஆனாலும், லஞ்சப் பேர்வழிகள் மீதான கைது நடவடிக்கை பெயரளவுக்கு கூடஇல்லாமல் ஒட்டுமொத்தமாக சரிந்துவிட்டது. இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழ் சமீபத்தில் சுட்டிக்காட்டி செய்தி வெளியிட்டது.
இதன்எதிரொலியாக சுறுசுறுப்படைந்தனர் லஞ்ச ஒழிப்பு போலீசார். உணவுப் பாதுகாப்பு அலுவலர், புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நடவடிக்கை இன்னும் தீவிரமாக்கப்பட வேண்டும்; போலீஸ், பத்திரப்பதிவு, வணிகவரி, மின்வாரியம், மாநகராட்சி என, பல்துறைகளின் மீதும் பாயவேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்பும்; நடக்குமா என பார்ப்போம்.