வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
மதுரை: 'மஞ்சுவிரட்டு போட்டிக்கு ஜல்லிக்கட்டு சட்டம் பொருந்துமா?' என, தமிழக அரசிடம் விபரம் பெற்று தெரிவிக்க வேண்டும் என, தமிழக அரசு வழக்கறிஞருக்கு, உயர் நீதிமன்ற மதுரை கிளை நேற்று உத்தரவிட்டது.

மதுரை மாவட்டம், மேலுார் அருகே சுமதிபுரத்தை சேர்ந்த மெய்யர் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:
சுமதிபுரத்தில் ஆண்டுதோறும் கோவில் திருவிழாவையொட்டி, பாரம்பரியமிக்க மஞ்சுவிரட்டு நடத்துகிறோம்.
இதில், காளைகளை துன்புறுத்துவதில்லை. இதுவரை யாருக்கும் காயம் ஏற்பட்டதில்லை. மே 31ல் மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி, மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினோம்.
கலெக்டர் அனுமதி மறுத்தார். இது, சட்டவிரோதம். இயற்கை நீதிக்கு எதிரானது. அனுமதி மறுத்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். விரட்டு மஞ்சுவிரட்டு நடத்த அனுமதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் குறிப்பிட்டார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா அமர்வு, 'மஞ்சு விரட்டுக்கு ஜல்லிக்கட்டு சட்டம் பொருந்துமா; அனுமதிக்க முடியுமா? என, தமிழக அரசிடம் விபரம் பெற்று அதன் வழக்கறிஞர் ஜூன் 2ல் தெரிவிக்க வேண்டும்' என, உத்தரவிட்டனர்.