வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: தமிழக மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜயின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டில் வருமான வரி சோதனை நடந்து வருகிறது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளதாகவும், மது பான பார்களில் சில முறைகேடுகள் நடப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது சமீபத்தில் ( அதிமுக ஆட்சிகாலத்தில்) வேலை வாங்கி தருவதாக மோசடி செய்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட் சிறப்பு குழு அமைக்க உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தமிழக கவர்னரிடம் பா.ஜ., தலைவர் அண்ணாமலை, அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மனு ஒன்றை அளித்தார்.
அவர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்றும் கோரினார். அதிமுக பொதுசெயலர் எடப்பாடி பழனிசாமி, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியும் வலியுறுத்தி இருந்தனர். அதிமுக சார்பில் சமீபத்தில் கவர்னர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது.
இந்நிலையில் செந்தில் பாலாஜியின் தம்பி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வீடு மற்றும் அலுவலகங்களில் இன்று(மே 26) ரெய்டு நடந்து வருகிறது. சென்னை, கோவை, கரூர் மற்றும் முக்கிய இடங்களில் இந்த ரெய்டு நடப்பதாக தெரிகிறது.
தமிழக அரசு ஒப்பந்ததாரர்கள் அலுவலகம் மற்றும் வீடுகள் உள்பட 40 க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடக்கிறது.
பொள்ளாச்சியில் உள்ள செந்தில் பாலாஜியின் உறவினர் கல்குவாரி மற்றும் தொண்டாமுத்தூரில் உள்ள அவரது ஆதரவாளர் ஒருவரது போதை மீட்பு சிகிச்சை மையத்திலும் ரெய்டு நடக்கிறது. இந்த மையத்தை செந்தில்பாலாஜிதான் திறந்து வைத்தார்.
கோவை கோல்ட் வின்ஸ் பகுதியில் உள்ள செந்தில்பாலாஜியின் நெருங்கிய நண்பரான கார்த்தி என்பவரது வீட்டிலும் சோதனை நடக்கிறது.
இதனிடையே கரூர் மாவட்டத்தில் 10 இடங்களில் தி.மு.க.,வினர் வருமான வரித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.கரூரில் உள்ள செந்தில் பாலாஜி சகோதரர் வீட்டில் அதிகாரிகள் சோதனை மேற்கொள்ள முற்பட்ட போது அதிகாாிகளுக்கும் திமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் அதிகாரிகள் வந்த காரினை திமுகவினர் சேதப்படுத்தினர். அதிகாரிகள் மீதும் தி.மு.க., வினர் தாக்குதலில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, பாதுகாப்பு கேட்டு வருமான வரித்துறையினர் எஸ்.பி., அலுவலகத்தில் குவிந்துள்ளனர். இதனால், 10 இடங்களில் சோதனை நடத்த முடியவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கரூர் மருத்துவமனையில் நான்கு அதிகாரிகள்
வருமான வரித்துறை இன்ஸ்பெக்டர் காயத்ரி, அதிகாரிகள் சுனில் குமார், பங்கஜ்குமார், கல்லா சீனிவாச ராவ் ஆகிய நான்கு பேரும், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக நேற்று மதியம் சேர்ந்தனர்.
அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இன்ஸ்பெக்டர் காயத்ரி தாக்கியதாக கூறி, தி.மு.க., தொண்டர் குமார், கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.