திருச்சி: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றப்பட்டுள்ளது. 1 முதல் 12ம் வகுப்புகள் வரை ஜூன் 7ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் மகேஷ் கூறியுள்ளார்.
கடந்த கல்வி ஆண்டுக்கான வகுப்புகள், ஏப்., 28ல் முடிந்து, ஒரு மாதம் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மீண்டும் வரும் 1ம் தேதி, திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என, பள்ளிக் கல்வி துறை அமைச்சர் மகேஷ் அறிவித்துள்ளார்.
அதாவது, ஆறு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு, ஜூன் 1ம் தேதியும்; ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு, ஜூன் 5ம் தேதியும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
கோடை வெயில் வாட்டி வதைக்கும் நிலையில், பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டியது அவசியம் என கூறப்படுகிறது. ஆசிரியர்கள் தரப்பில், பள்ளி திறப்பை தள்ளி வைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு உள்ளது.
இந்நிலையில் திருச்சியில் நிருபர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியதாவது: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து 1 முதல் 12ம் வகுப்புகளுக்கு ஜூன் 7 ம் தேதி திறக்கப்படும் கோடை வெயிலின் தாக்கம் அதிகம் உள்ளதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.