“செங்கோல் என்பது மதச்சார்பற்றது. ஆனால் பார்லிமென்ட் திறப்பு நிகழ்ச்சியில் வழங்கவுள்ள செங்கோலில் நந்தி சிலை உள்ளது. இது மத சின்னமாக உள்ளதால் அதை எதிர்க்கிறோம்” என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:
பார்லிமென்ட் புதிய கட்டடத் திறப்பு விழாவில் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி புறக்கணிக்கப்பட்டுள்ளது ஜனநாயக மாண்புகளுக்கு எதிரானது. காங்., உட்பட 18 கட்சிகள் இவ்விழாவை புறக்கணிக்கவுள்ளன. ஆர்.எஸ்.எஸ்.,ஐ சேர்ந்த சாவர்கர் பிறந்த தினத்தை கொண்டாடும் வகையில் மே 28 ல் திறப்பு விழா நடப்பதை கருப்பு நாளாக அனுசரித்து கருப்பு கொடியேற்ற உள்ளோம்.
'ஆந்திரா, சட்டீஸ்கர் தலைமை செயலகத்தை முதல்வர் திறந்தனர், பார்லிமென்ட் கட்டடத்தை பிரதமர் திறப்பதில் தவறில்லை' என மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுகிறார். விழாவிற்கு ஜனாதிபதி, துணை ஜனாதிபதி இருவரும் முதலில் அழைக்கப்பட்டனரா என அவர் பதில் அளிப்பாரா.
செங்கோல் என்பது மதச்சார்பற்றது. ஆனால் இந்நிகழ்ச்சியில் வழங்கவுள்ள செங்கோலில் நந்தி சிலை உள்ளது.
இது மத சின்னமாக உள்ளதால் அதை எதிர்க்கிறோம்.
தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டது போல் மது ஒழிப்பை தி.மு.க., செயல்படுத்த வேண்டும். நாடுமுழுவதும் மதுவிலக்கை வலியுறுத்தி ஜூனில் தமிழகம் தழுவிய போராட்டம் நடத்துவோம். தி.மு.க., - காங்., கூட்டணியில் தான் வி.சி.க., தொடரும் என்றார்.