பள்ளிபாளையம்: ஆவராங்காடு, அரசு துவக்கப்பள்ளி வகுப்பறை சுவற்றில், ரயில் பெட்டிகள் தத்துரூபமாக வரையப்பட்டுள்ளது, அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் அடுத்த ஆவராங்காடு பகுதியில் அரசு துவக்கப்பள்ளி செயல்படுகிறது. தற்போது, கோடை விடுமுறை என்பதால் பள்ளியில் பராமரிப்பு, வண்ணம் பூசுதல், சீரமைப்பு, கான்கிரீட் தளம் போன்ற பணிகள், 80 லட்சம் ரூபாய் மதிப்பில் நடந்து வருகிறது. வகுப்பறைகள் அனைத்தும் வண்ணமயமாக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு வகுப்பறையின் சுவற்றில் ஓவியங்கள் வரையப்படுகின்றன.
பள்ளியில் நுழைந்ததும், முன்னே உள்ள வகுப்பறையின் சுவற்றில் ரயில் இன்ஜின், பெட்டிகள் வரையப்பட்டுள்ளன. இது பார்ப்பதற்கு உண்மையான ரயில் நிற்பது போல தெரிகிறது. அந்தளவுக்கு தத்துரூபமாக வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத்தை நாமக்கல்லை சேர்ந்த ரஜினி ஆர்ட்ஸ் நிறுவனத்தினர் வரைந்துள்ளனர். ஓவியத்தை மாணவர்கள், பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.