எருமப்பட்டி: அரசு பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால், துவக்கப்பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அறிவியல் திறனை வளக்கும் வகையில், பள்ளி கல்வித்துறை சார்பில், வானவில் மன்றம் என்ற தலைப்பில் அறிவியல் தொடர்பான வகுப்புகள் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
எருமப்பட்டி யூனியனில் உள்ள, 20 அரசு துவக்கப்பள்ளிகளில் கடந்த, 10 முதல் வானவில் மன்றம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. மாணவர்கள், பெற்றோர்களுக்கு அறிவியல் ஆசிரியர்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இது குறித்து ஆசிரியர்கள் கூறியதாவது:
எருமப்பட்டி யூனியனில் உள்ள முட்டாஞ்செட்டி, பளையபாளையம், அலங்காநத்தம், திப்பரமகாதேவி உள்ளிட்ட, 14 அரசு பள்ளிகளில் வானவில் மன்றம் நடந்துள்ளது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் ஒன்றியம் வாரியாக மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டு, மாவட்ட அளவில் நடக்கும் அறிவியல் தொடர்பான செயல்முறை வகுப்பில் கலந்து கொள்ள வைத்து பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.