மின் கசிவால் குடிசை வீட்டில் தீ
நாமக்கல் மாவட்டம் பரமத்தி அருகே திடுமல் நகப்பாளையத்தை சேர்ந்த விஸ்வநாதன், 45 விவசாயி. இவர் கீற்று கொட்டகை மேல், தகரம் வேய்ந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, மின் கசிவு காரணமாக கீற்று கொட்டகை தீப்பிடித்தது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர்.
இந்நிலையில், வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறை வீரர்கள் தீயை மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால், அருகில் இருந்த மற்ற குடிசைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. விஸ்வநாதன் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்ட டூவீலர், பேன், 'டிவி', பிரிட்ஜ், பீரோ, துணிமணிகள், உணவு பொருட்கள் ஆகியவை தீயில் கருகி சாம்பலாயின.
பல்லாங்குழி சாலை: கிராம மக்கள் அவதி
செக்காரப்பட்டி மயானபாதை செல்லும் சாலை குண்டும்,குழியுமாக இருப்பதால் பொதுமக்கள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.
மல்லசமுத்திரம் ஒன்றியம், செக்காரப்பட்டியில் இருந்து குப்பிச்சிபாளையம் செல்லும் சாலையில் பல ஆண்டுகளாக சாலை, குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. குறிப்பாக இச்சாலை பல்வேறு கிராமங்களை இணைக்கும் இணைப்பு சாலையாகவும், இப்
பகுதி மக்கள் பயன்படுத்தும் மயான பாதையாகவும் விளங்கி வருகிறது. இச்சாலை ஆங்காங்கே குண்டும், குழியுமாக காட்சியளிப்பதால் மக்கள் செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். இந்த சாலையை சரி செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
குமாரபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் இன்ஸ்பெக்டராக பணியாற்றிய ரவி, பணியிட மாறுதலில் நாமக்கல் மாவட்டம், பரமத்தி இன்ஸ்பெக்டராக பொறுப்பேற்றார். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு இன்ஸ்பெக்டராக இருந்த தவமணி, குமாரபாளையம் இன்ஸ்பெக்டராக நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார். இவருக்கு எஸ்.ஐ.க்கள், எஸ்.எஸ்.ஐ.க்கள், எட்டுக்கள், போலீசார் வாழ்த்து தெரிவித்தனர்.
'தீட்சிதர் குழந்தைக்கு இரு விரல்
பரிசோதனை நடந்தது உண்மை'
தீட்சிதர் குழந்தைகளுக்கு, இரு விரல் பரிசோதனை நடந்தது உண்மைதான் என, குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் கூறியுள்ளது.
தேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணைய உறுப்பினர் டாக்டர் ஆனந்த், நேற்று நாமக்கல்லில் நிருபர்களிடம் கூறியதாவது: சிதம்பரம் தீட்சிதர் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை நடந்தது உண்மைதான். இதற்கான ஆதாரம் ஆணையத்திடம் உள்ளது. இந்த வழக்கில், கவர்னர் கூறியது முற்றிலும் உண்மை. பெண் குழந்தைகளுக்கு இருவிரல் பரிசோதனை செய்து துன்புறுத்தியுள்ளனர். நடக்காத குழந்தை திருமணத்தை, நடந்ததாக கூறி சிறுமியை ஒத்துக்கொள்ள வைக்க இதுபோல் செய்துள்ளனர். மொத்த அறிக்கையையும் சமர்ப்பிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.
விவசாயிகளுக்கு
பயிற்சி முகாம்மல்லசமுத்திரம் அடுத்த, வையப்பமலையில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பில், தமிழ்நாடு நீர்பாசன வேளாண்மை நவீன மயமாக்கல் திட்டம் மூலம் திருமணிமுத்தாறு உபவடி நிலப்பகுதி விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் இரண்டு நாட்கள் நடந்தது.
வேளாண்மை துணை இயக்குனர் நாசர் வரவேற்றார். கண்காட்சி அரங்கை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் முருகன் தொடங்கி வைத்தார். அனைத்து துறை அலுவலர்களும், தங்கள் துறை சார்ந்த திட்டங்கள், செயல்பாடுகள் குறித்து பேசினர்.
முள்ளுக்குறிச்சியில்
ஜல்லிக்கட்டு விழா
நாமகிரிப்பேட்டை ஒன்றியம், முள்ளுக்குறிச்சி ஊராட்சி, தும்பல்பட்டி கிராமத்தில் நாளை, ஜல்லிக்கட்டு விழா நடக்கிறது.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஜல்லிக்கட்டு விழாவுக்கு திமுக., ஏற்பாடு செய்துள்ளது. 600-க்கும் மேற்பட்ட காளைகள் விழாவில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றிய செயலர் ராமசுவாமி தலைமையில் நடக்கும் விழாவில், மாவட்ட கலெக்டர் உமா, எம்.பி., ராஜேஷ்குமார், அமைச்சர் மதிவேந்தன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். விழா நாளை காலை, 6:00 மணிக்கு தொடங்குகிறது.