மனிதர்களின் மூளைக்குள் மைக்ரோ சிப் பொருத்தி ஆய்வு செய்ய எலான் மஸ்கின் நியூராலிங்க் நிறுவனத்திற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
2016ம் ஆண்டில் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்கால் துவங்கப்பட்ட நியூராலிங்க் நிறுவனம், டிவிட்டரில் தனது முதல் மனித மருத்துவ பரிசோதனையை தொடங்க அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாடு அமைப்பு அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், மருத்துவ பரிசோதனையில் பங்கேற்க ஆட்களை சேர்ப்பது இன்னும் துவங்கவில்லை. எனவும், விரைவில் அது தொடர்பான கூடுதல் தகவல்களைப் பகிர்ந்து கொள்வோமெனவும் தெரிவித்துள்ளது.
மூளையில் மைக்ரோ சிப் பொருத்தும் போது, கம்பிகள் சுற்றி செல்லலாம் அல்லது சிப் அதிக வெப்பமடையலாம் என கடந்த மார்ச்சில் எஃப்.டி.ஏ மனித சோதனைக்கு ஒப்புதல் பெறுவதற்கான நியூராலிங்கின் கோரிக்கையை நிராகரித்தது. இதுவரை நியூராலிங்க், பன்றிகள், குரங்குகள் உள்ளிட்ட விலங்குகளின் மூளையில் மைக்ரோ சிப்களை பொருத்தி பரிசோதனை நடத்தி உள்ளது.
![]()
|
சிறிய நாணயம் அளவுக்கு உள்ள மைக்ரோ சிப் வாயிலாக மனிதர்கள் மனதில் நினைப்பதை, கணினி வாயிலாக வெளிப்படுத்த முடியுமென நியூராலிங்க் கூறியுள்ளது. மேலும் மனிதர்கள் இழந்த பார்வையை பெற முடியும். தசைகளை அசைக்கக் கூட முடியாத நோய் பாதிப்பில் உள்ளவர்களால் இதன் மூலம் சாதாரண நபர்களைவிட வேகமாக மொபைல் போனை இயக்க முடியும்.
தீவிர முதுகு தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டவர்களின் முழு உடல் செயல்பாட்டையும் இதன் மூலம் மாற்ற முடியும். பார்கின்சன் போன்ற பல்வேறு நரம்பியல் நோய்களுக்கும் இது தீர்வாகும் என கூறப்பட்டுள்ளது.