திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் தலைநகராக திகழ்வதால், கலெக்டர், எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்ட மாவட்ட அளவிலான அரசு அலுவலகங்கள் அதிகளவில் உள்ளன.
பிரசித்தி பெற்ற கோவில்கள், வர்த்தக நிறுவனங்கள், அரசு, தனியார் பள்ளிகள் மற்றும் வங்கி, தனியார் அலுவலகங்களும் இங்கு செயல்பட்டு வருகின்றன.
சென்னையில் இருந்து திருத்தணி, திருப்பதி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகனங்கள் திருவள்ளூர் நகரை கடந்து செல்ல வேண்டும்.
இதனால் நகரில் தினசரி ஒரு லட்சம் வாகனங்கள் சென்று வருகின்றன. அதிகளவில் ஆட்டோக்களும் இயக்கப்படுவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
தானியங்கி சிக்னல்
போக்குவரத்தை சீரமைக்கவும், விபத்துகளை தவிர்க்கவும் ஜே.என்.சாலையில் ஆயில்மில், அரசு மருத்துவமனை, ஆவடி சாலை சந்திப்பு, உழவர் சந்தை, காமராஜர் சிலை, எம்.ஜி.ஆர்., சிலை, டோல்கேட், தேரடி, செங்குன்றம் சாலை சந்திப்பு, மணவாளநகர் சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் தானியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டன.
சில மாதங்கள் மட்டுமே இயங்கிய இந்த சிக்னல்கள், முறையான பராமரிப்பின்றி பழுதாகி, தற்போது காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளன.
மேற்கண்ட சாலைகளில் போக்குவரத்து போலீசார், காலை, மாலை நேரங்களில் சில மணி நேரம் மட்டுமே பணி செய்து விட்டு செல்வதால், நெரிசலில் சிக்கி பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பணிக்கு செல்வோர் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
எனவே, திருவள்ளூர் நகரில் பழுதடைந்துள்ள சிக்னல்களை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.