மே 27, 1964
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாதில், வழக்கறிஞரும், செல்வந்தருமான மோதிலால் நேரு - ஸ்வரூபராணி தம்பதிக்கு மகனாக, 1889 நவம்பர், 14ல் பிறந்தவர் ஜவஹர்லால் நேரு.
பிரிட்டன் கேம்ப்ரிட்ஜ் பல்கலையின் நுழைவுத் தேர்வு எழுதி, 'டிரினிட்டி' கல்லுாரியில் பட்டமும், சட்டமும் முடித்து, நாடு திரும்பினார்.
காந்தியுடன் இணைந்து சுதந்திர போராட்டங்களில் பங்கேற்று, ஒன்பதாண்டுகள் சிறையில் இருந்தார். 1947 ஆகஸ்ட் 15ல், பிரதமராகி, டில்லியில் தேசிய கொடியை ஏற்றினார். திட்டக்குழுவை அமைத்து, ஐந்தாண்டு திட்டங்களின் வாயிலாக, தொழிற்சாலைகள், பல்கலைகள், விவசாயம், பால் வளத்தை பெருக்கினார்.
'அணிசேரா கொள்கை'யை உருவாக்கி, உலக அமைதிக்கு பாடுபட்டார். எனினும், சீன ராணுவம் எல்லையில் சில பகுதிகளை கைப்பற்றியதாலும், மகள் இந்திராவின் அதிரடி முடிவுகளாலும் பக்கவாதத்துக்கு ஆளாகி, 1964ல் இதே நாளில் மறைந்தார்.
'நவீன இந்தியாவின் சிற்பி - சாச்சா நேரு' என, புகழப்பட்ட, நாட்டின் முதல் பிரதமர் நினைவு தினம் இன்று!