பெங்களூரு,-கர்நாடக துணை முதல்வர் சிவகுமார், முக்கியமான ஐந்து துறைகளை கேட்டு, பிடிவாதம் பிடிக்கிறார். இதே காரணத்தால் அமைச்சரவை விஸ்தரிப்புக்கு, முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது.
நடந்து முடிந்த கர்நாடக சட்டசபை தேர்தலில், காங்கிரஸ், 135 தொகுதிகளை கைப்பற்றி, பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்தது. முதல்வர் பதவிக்கு சித்தராமையா, சிவகுமார் இடையை போட்டி எழுந்தது.
அதன்பின் ஆட்சியை பகிர்ந்தளிக்க முடிவு செய்த, காங்கிரஸ் மேலிடம், முதலில் முதல்வராக சித்தராமையாவுக்கும், இரண்டரை ஆண்டுக்கு பின், சிவகுமாருக்கும் என, முடிவானதாக கூறப்பட்டது.
மே 20ல், முதல்வராக சித்தராமையா, துணை முதல்வராக சிவகுமாரும் பதவி ஏற்றனர். இவர்களுடன் எட்டு அமைச்சர்களும் பதவியேற்றனர். அரசு அமைந்து ஒரு வாரம் கடந்தும், இன்னும் துறைகள் ஒதுக்கப்படவில்லை. அமைச்சர்கள் முக்கியமான துறை மீது 'கண்' வைத்து, முயற்சிக்கின்றனர்.
இதற்கிடையில் பெங்களூரு நகர வளர்ச்சி, நீர்ப்பாசனம், மின்சாரம், உள்துறை, கிராம வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ் துறை என ஐந்து துறைகளை கேட்டு, சிவகுமார் பிடிவாதம் பிடிக்கிறார். தனக்கு நீர்ப்பாசனம், பெங்களூரு நகர வளர்ச்சி துறையும்; தன் ஆதரவு அமைச்சர்களுக்கு மின்சாரம், உள்துறை, கிராம வளர்ச்சி, பஞ்சாயத்துராஜ்துறை வழங்க வேண்டும் என, கோரியதாக கூறப்படுகிறது.
இதற்கு முன் முதல்வர் பதவியை விரும்பிய சிவகுமாருக்கு, துணை முதல்வர் பதவி வழங்கி சமாதானம் செய்தனர். பிடிக்கவில்லை என்றாலும், துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்ட அவர், 'ஒரே ஒரு துணை முதல்வர் பதவியை உருவாக்க வேண்டும், இரண்டு அல்லது மூன்று துணை முதல்வர் பதவிகளை உருவாக்கக்கூடாது' என, நிபந்தனை விதித்தார்.
இப்போது முக்கியமான துறைகளை, தன் வசமாக்க முயற்சிக்கிறார். இவரது முயற்சி பலனளிக்குமா என்பது இன்று தெரியலாம்.