சேலம்:டெல்டா பாசன குறுவை சாகுபடிக்கு ஜூன் 12ல் மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்க அரசு முடிவு செய்துள்ளது. முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்க ஏற்பாடு நடக்கிறது.
தமிழகத்தில் குறுவை சாகுபடிக்காக, ஒவ்வொரு ஆண்டும் ஜூன், 12ல், மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம்.
கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியதால், மே மாதத்திலேயே கர்நாடகா அணைகள் நிரம்பின. இதனால், முன்கூட்டியே மே 24ல் மேட்டூர் அணை திறக்கப்பட்டது.
மேட்டூர் அணை திறப்புக்கு இன்னும் 17 நாட்களே இருக்கும் நிலையில், காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் மழை துவங்கி உள்ளது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தற்போது ஆங்காங்கே மழை துவங்கியுள்ளதால், அணை நீர்வரத்து மெல்ல அதிகரித்து வருகிறது.
நடப்பாண்டில் தென்மேற்கு பருவ மழை ஜூன் முதல் வாரம் தொடங்கும் என்றும், இயல்பு அளவுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை மையம் அறிவித்துள்ளது. அதே நேரம் மேட்டூர் அணையில், 103.68 அடி நீர்மட்டம் உள்ளது.
இதனால் திட்டமிட்டபடி ஜூன், 12ல் குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணை திறக்க அரசு முடிவு செய்துஉள்ளது.
அன்று, தமிழக முதல்வர் ஸ்டாலின், அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைக்க உள்ளார்.
இதனால், குறுவை சாகுபடிக்கு திட்டமிட்டபடி மேட்டூர் அணை திறக்கப்படும் என்ற நம்பிக்கையில் முன்னேற்பாடு பணியில் ஈடுபட்டுள்ள டெல்டா மாவட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.