கோவை:''விவசாயிகள் அதிகளவில் சிறுதானியங்களை சாகுபடி செய்ய முன்வர வேண்டும்,'' என கவர்னர் ரவி பேசினார்.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலையில் சிறுதானிய பயிர்களுக்கான பன்னாட்டு கருத்தரங்கம், கடந்த மூன்று நாட்கள் நடந்தது.
நேற்று நடந்த நிறைவு நாள் விழாவில், தமிழக கவர்னர் ரவி தலைமை வகித்து, நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தொடர்ந்து, வேளாண் பல்கலை மற்றும் 10 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், கவர்னர் முன்னிலையில் மாற்றிக்கொள்ளப்பட்டது.
நிகழ்ச்சியில் கவர்னர் ரவி பேசியதாவது:
ஆங்கிலேயர்கள் நம் நாட்டின் பொருளாதாரம் மட்டுமின்றி, விவசாயத்தையும் அழித்து விட்டனர். 1800ம் ஆண்டுகளில், 2.4 ஏக்கருக்கு 7 டன் நெல் உற்பத்தி செய்த நாம், ஒரு காலத்தில் பஞ்சம், பட்டினியை எதிர்கொண்டோம்.
ஊட்டச்சத்து குறைபாடு, நீர் பற்றாக்குறை, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற பயிர் என்ற அடிப்படையில், அனைத்திற்கும் தீர்வாக சிறுதானிய சாகுபடி அமையும். விவசாயிகள் அதிகளவில் சிறுதானியங்களை சாகுபடி செய்ய முன்வர வேண்டும்.
குறைவான தண்ணீர் இருந்தால் போதும்; அதிக ஊட்டச்சத்துக்களும் நமக்கு கிடைக்கும். நிலையான, ஆரோக்கியமான எதிர்காலத்திற்கு சிறுதானி யங்கள் சாகுபடி செய்யவேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிறைவு விழா நிகழ்வில், பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், விஞ்ஞானிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.