உடுமலை:இலவச பட்டாவுக்கான இடத்தை அளவீடு செய்ய வலியுறுத்தி, பயனாளிகள் காத்திருப்பு போராட்டத்தில், ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு சென்ற வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
மடத்துக்குளம் தாலுகா, கொமரலிங்கத்தில் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன், வீடு இல்லாத மக்களுக்கு, 90க்கும் மேற்பட்ட இலவச வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டது. ஆனால், பட்டாவுக்குரிய இடம் அளவீடு செய்து வழங்கப்படவில்லை.
இதனால், வீடு கட்ட முடியாமல், பயனாளிகள் பாதிக்கப்பட்டனர். பட்டா வழங்குவதற்கான நிலத்திலும், பல்வேறு ஆக்கிரமிப்புகள் ஏற்படுத்தப்பட்டு, பயனாளிகளுக்கு இடம் கிடைப்பது கேள்விக்குறியாக மாறியது.
இதுகுறித்து, பல முறை மனு கொடுத்தும், மடத்துக்குளம் தாலுகா அலுவலகம் வாயிலாக எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பாதிக்கப்பட்ட பயனாளிகள் மற்றும் விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், பட்டாவுக்கான இடத்தை அளவீடு செய்து வழங்கும் வரை, காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.
இதையடுத்து, நேற்று காலை, பயனாளிகள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பவ இடத்துக்கு சென்ற மடத்துக்குளம் தாசில்தார் செல்வி உள்ளிட்ட அதிகாரிகள் நேரடியாக சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், பட்டா வழங்க ஒதுக்கீடு செய்யப்பட்ட, இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. விரைவில், ஒவ்வொரு பயனாளிக்கும், பட்டாவுக்குரிய இடம் அளவீடு செய்து, ஒப்படைக்கப்படும் என உறுதியளித்தனர்.
இதையடுத்து, பயனாளிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். பயனாளிகள் போராட்டத்தால் அப்பகுதியில், பரபரப்பு ஏற்பட்டது.