கோவை:கோவையில் எதிர்வரும் ஐந்து நாட்கள், வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று 6 மி.மீ., நாளை 8 மி.மீ., மழையும் 29,30,31 ஆகிய தேதிகளில் 3 மி.மீ., மழையும் எதிர்பார்க்கப்படுவதாக, வேளாண் பல்கலை காலநிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை, 33 முதல் 36 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்சம் 23-25 டிகிரி செல்சியஸ் ஆகவும், காலை நேர காற்றின் ஈரப்பதம் 75 சதவீதமாகவும், மாலை நேர காற்றின் ஈரப்பதம் 55 சதவீதமாகவும் இருக்கும்.
காற்றின் வேகம் சராசரியாக, 10-18 கி.மீ., வேகத்தில் பெரும்பாலும் கிழக்கு திசையிலிருந்து தென்மேற்கு திசை வரை வீசக்கூடும். மழையுடன் வேகமான சூறைக்காற்றும் எதிர்பார்க்கப்படுவதால், ஐந்து மாதங்களுக்கு மேலான கரும்பில் தோகை உரித்து விட்டு கட்ட வேண்டும்.
பின்பட்ட கரும்பு நடவு செய்யும் விவசாயிகள் நடவை தொடரலாம்; ஏற்கனவே நடவு செய்யப்பட்ட இடங்களில், சீரான பயிர் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும்.
ஐந்து மாதங்களுக்கு மேலான வாழை மரங்களுக்கு, தகுந்த முட்டு கொடுக்க வேண்டும். எதிர்பார்க்கப்படும், மழையை பயன்படுத்தி தகுந்த வடிகால் வசதியுடன் மஞ்சள் நடவு செய்யவும். தேவைப்பட்டால் மண்ணின் ஈரத்தை பொறுத்து, நீர்பாசனம் செய்யவும். மழையுடன் இடி மின்னல் எதிர்பார்க்கப்படுவதால், கால்நடைகளை பாதுகாக்க கொட்டைகளுக்குள் கட்டவும்.
கடந்தவார மழையின் காரணமாக, புதிதாக முளைத்த புல்லினை மேயவிடாமல் கால்நடைகளை பாதுாக்கவேண்டும் என, விவசாயிகளுக்கு காலநிலை ஆராய்ச்சி மைய விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.