குளித்தலை,7-காணாமல் போன சிறமி, கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
குளித்தலை அடுத்த, நங்கவரம் டவுன் பஞ்., சவாரி மேட்டை சேர்ந்தவர் தங்கராசு மகள் தேவிகா, 16. இவர், நாமக்கல் மாவட்டம் வேலகவுண்டம்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 வரை படித்து விட்டு, தற்போது ஓராண்டாக விவசாய கூலி வேலைக்கு சென்று வந்தார்.
அதே ஊரை சேர்ந்த நங்கவரம் டவுன் பஞ்., ஆறாவது வார்டு கவுன்சிலர் (தி.மு.க., ) குணசேகர் மகன் கஜேந்திரன் ஆகிய இருவரும் ஓராண்டாக காதலித்து வந்தனர். ஒரே சமுதாயத்தை சேர்ந்த இருவரின் காதல் விவகாரத்துக்கு, கஜேந்திரன் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில் கடந்த, 24 இரவு வீட்டிலிருந்த தேவிகாவை காணவில்லை. மறுநாள் தேவிகாவை காணவில்லை என, குளித்தலை போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை, 7:00 மணியளவில் சவாரிமேட்டில் உள்ள விவசாய கிணற்றில் இறந்த நிலையில் சடலமாக மிதந்தார்.
அப்பகுதி மக்கள் குளித்தலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குளித்தலை போலீசார், முசிறி தீயணைப்பு துறையின் உதவியுடன், கிணற்றில் சடலமாக மிதந்த தேவிகாவின் உடலை வீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தேவிகாவின் இறப்பிற்கு, தி.மு.க., கவுன்சிலர் குணசேகர் குடும்பத்தினர் தான் காரணம் என்றும், தேவிகாவை அவர்கள் கொன்று கிணற்றில் வீசி உள்ளதாகவும், அவர்களை கைது செய்ய வேண்டும் என, தேவிகாவின் உறவினர்கள் கூறினர்.
காதல் விவகாரத்தால் தேவிகா கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து, குளித்தலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.