ஈரோடு,-ஈரோட்டில், மீனாட்சி சுந்தரனார் சாலையில், 10 ரூபாய் கட்டணத்தில் ஆற்றல் உணவகத்தை, உலக சமாதான அறக்கட்டளை நிறுவனர் குருமகான் துவக்கி வைத்தார். ஆற்றல் அறக்கட்டளை நிறுவன தலைவர் அசோக்குமார் தலைமை வகித்து கூறியதாவது: அறக்கட்டளை சார்பில் புதிய உணவகம், 10 ரூபாய் கட்டணத்தில் பசியாற விரும்புவோருக்கு, தரமான, ருசியான உணவை, வாரத்தின் ஏழு நாட்களும் வழங்குகிறோம். காலை, மதியம், இரவில் அளவில்லா உணவு பரிமாறப்படும்.
ஒரே நேரத்தில், 60 பேர் அமர்ந்து உணவு அருந்தலாம். காலை, 8 மணி முதல், 10 மணி வரை இட்லி, சாம்பார், சட்னி; மதியம், 12:௦௦ முதல், 2:௦௦ மணி வரை சாதம், சாம்பார், பொரியல், மோர், ஊறுகாய்; இரவு, 7:௦௦ மணி முதல், 9:௦௦ மணி வரை இட்லி, சாம்பார், சட்னி வழங்கப்படும். ஆற்றல் அறக்கட்டளை கடந்த, 2021ல் துவங்கி, அரசு பள்ளிகள் மேம்படுத்துதல், சமுதாய கூடங்கள் கட்டுதல், ஆலயங்கள் புதுப்பித்தல், கல்வி மற்றும் விளையாட்டு துறையில் சாதனை புரிந்த மாணவர்களை கவுரவித்தல், கிராமப்புற மக்களுக்கு தரமான மருத்துவ சேவை அளித்தல் போன்ற பணிகளை செய்து வருகிறது. இதுபோன்ற பணியை மாவட்டத்தின் பிற பகுதியிலும் செய்ய திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்வில் பி.வி.பி., பள்ளி தாளாளர் ராமகிருஷ்ணன், மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., சரஸ்வதி, முன்னாள் எம்.எல்.ஏ., ராமலிங்கம், அக்னி நிறுவன தலைவர் தங்கவேல், இந்து கல்வி நிலையம் பாலுசாமி, செங்குட்டுவன், சென்னை சில்க்ஸ் நிர்வாக இயக்குனர் விநாயகம் உட்பட பலர் பங்கேற்றனர்.