திருப்புவனம் : திருப்புவனம் வட்டாரதேங்காய்களுக்கு வெளி மாநிலங்களில் விலை குறைந்ததற்கு காரணம் லாரி வாடகை என தென்னை விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருப்புவனம், திருப்பாச்சேத்தி, மடப்புரம், கானூர் உள்ளிட்ட பகுதிகளில் ஒன்றரை லட்சம் தென்னைமரங்கள் உள்ளன. இவற்றில் இருந்து 45 முதல் 60 நாட்களுக்கு ஒரு முறை தேங்காய் வெட்டப்படுகிறது.
ஒரு மரத்திற்கு முன்பு சாதாரணமாக 15 முதல் 25 தேங்காய் வரை கிடைத்தது. தொடர் மழை காரணமாக விளைச்சல்அதிகரித்ததால் ஒரு மரத்திற்கு 60 காய்கள் வரை கிடைக்கிறது.
திருப்புவனம் பகுதி தேங்காய்கள் குஜராத், மஹாராஷ்டிரா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட இடங்களுக்கு இடைத்தரகர்கள் மூலம் அனுப்பப்படுகிறது. திருப்புவனத்தில் ஒரு வாரத்தில் 20 க்கும் மேற்பட்ட லாரிகளில் தேங்காய்கள் வெளிமாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
திருப்புவனத்தில் இருந்து மும்பை செல்ல லாரி வாடகை சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதிகபட்சம் 80 ஆயிரம் ரூபாய் வரை கொடுத்து வந்தனர். கொரோனா பரவலுக்கு பின் லாரி வாடகை ஒரு லட்சத்து இருபது ஆயிரம் ரூபாயாக உயர்ந்து விட்டது. மற்ற ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மும்பை செல்ல லாரி வாடகை 85 ஆயிரத்திற்குள் முடிந்து விடும், தமிழகத்தில் இருந்து லாரி வாடகை அதிகம் என்பதால் மும்பை வியாபாரிகள் ஆந்திரா, கர்நாடகா தேங்காய்களையே வாங்குகின்றனர்.
விவசாயிகள் தரப்பில் கூறுகையில், ஒரு டன் தேங்காய் 45 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையானது. பல்வேறு மாநிலங்களில் விளைச்சல் அதிகம் என்பதாலும் லாரி வாடகை குறைவு என்பதாலும் அந்த காய்களை வாங்குவதால் திருப்புவனம் பகுதி தேங்காய்கள் ஒரு டன் 25 ஆயிரமாக விலை குறைந்து விட்டது, என்றனர்.