மதுரையில் தலா ரூ.5.25 லட்சம் செலுத்தி அரசு வீட்டுமனை பெற்ற 38 பத்திரிகையாளரின் பட்டாக்கள் ஒரே நாளில் ரத்து | In Madurai, 38 journalists who got government houses by paying Rs 5.25 lakh each had their licenses canceled in one day. | Dinamalar

மதுரையில் தலா ரூ.5.25 லட்சம் செலுத்தி அரசு வீட்டுமனை பெற்ற 38 பத்திரிகையாளரின் பட்டாக்கள் ஒரே நாளில் ரத்து

Added : மே 27, 2023 | கருத்துகள் (1) | |
மதுரை : மதுரையில் மானியம், இலவசம் இல்லாமல் பத்திரிகையாளர்கள் என்ற முன்னுரிமை அடிப்படையில் தலா ரூ.5.25 லட்சம் காலக்கிரையத்தில் அரசு வீட்டுமனை பெற்ற 38 பேரின் பட்டாக்களை நீதிமன்ற அறிவுறுத்தலையும் மீறி பணிமாறுதல் ஆகிச்சென்ற கடைசி நாளில் மாஜி கலெக்டர் அனீஷ்சேகர் ரத்து செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு அரசு வீட்டுமனை வழங்க


மதுரை : மதுரையில் மானியம், இலவசம் இல்லாமல் பத்திரிகையாளர்கள் என்ற முன்னுரிமை அடிப்படையில் தலா ரூ.5.25 லட்சம் காலக்கிரையத்தில் அரசு வீட்டுமனை பெற்ற 38 பேரின் பட்டாக்களை நீதிமன்ற அறிவுறுத்தலையும் மீறி பணிமாறுதல் ஆகிச்சென்ற கடைசி நாளில் மாஜி கலெக்டர் அனீஷ்சேகர் ரத்து செய்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரையில் பத்திரிகையாளர்களுக்கு அரசு வீட்டுமனை வழங்க வேண்டும் என்று 2008 ல் அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் சங்கங்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன்படி 11 ஆண்டுகள் முயற்சிக்கு பின் 2019 ல் மதுரை சூர்யாநகரில் 86 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.

தமிழகத்தில் இதுவரை பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டதில் அதிகபட்சமாக மதுரையில் தான் நிலம் மதிப்பு 3 சென்டிற்கு ரூ.5 லட்சத்து 25 ஆயிரத்து 816 என நிர்ணயம் செய்யப்பட்டது. இதில் 46 பேர் பணம் செலுத்தி பட்டா பெற்று விட்டனர். இந்த வகையில் மதுரையில் அரசுக்கு பத்திரிகையாளர்கள் ரூ.2.50 கோடிக்கு மேல் பணம் செலுத்தியுள்ளனர்.

வீட்டுமனை உத்தரவில், 'பத்திரிகையாளர்கள் அவர்களது குடும்பத்தினர் பெயரில் எவ்வித சொத்துக்களும், 50 கிலோ மீட்டர் சுற்றளவில் இருக்க கூடாது' போன்ற நிபந்தனைகள் தவறாக விதிக்கப்பட்டன. இது இலவச பட்டாக்கள் வழங்கும் போது விதிக்கப்படும் நிபந்தனைகள். காலக்கிரையத்தில் பணம் செலுத்தியவர்களுக்கு இதுபோன்று நிபந்தனை பொதுவாக இடம் பெறாது. தமிழகத்தின் பிற பகுதிகளில் பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை வழங்கிய போது இந்த நிபந்தனைகள் பின்பற்றப்படவில்லை.

எனவே இந்த நிபந்தனையில் இருந்து தளர்வு அளிக்க கோரி முதல்வர் ஸ்டாலின், வருவாய்த்துறை அமைச்சர் சாத்துார் ராமச்சந்திரன் ஆகியோருக்கு சங்கங்கள் மனுக்கள் அளித்துள்ளன. இது பரிசீலனையில் உள்ளது.


முதல்வர் ஸ்டாலின் தலையிடுவாரா:


உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நான்கு பத்திரிகையாளர்கள் அரசு வீட்டுமனை கோரி கலெக்டர் அனீஷ்சேகருக்கு எதிராக தொடர்ந்த வழக்கு ஒன்றின் தீர்ப்பில் '86 பத்திரிகையாளர்கள் காலக்கிரையத்தில் பணம் செலுத்தி பட்டா பெற்றுள்ளனர். அனைவரும் உண்மையான முன்னணி பத்திரிகையாளர்கள். ஏற்கனவே பணம் செலுத்தி பட்டா பெற்றுவிட்டவர்களை தொந்தரவு செய்ய விரும்பவில்லை' என நீதிபதி அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில் பட்டா பெற்றதில் பொருளாதாரத்தில் பின்தங்கியவர் இல்லை, வீடு, நிலம் உள்ளது எனக்கூறி 38 பேரின் பட்டாக்களை முன்தேதியிட்டு பணிமாறுதலில் செல்வதற்கு முந்தைய நாளில் கலெக்டர் அனீஷ் சேகர் ரத்து செய்துள்ளார்.

அனீஷ்சேகரின் இந்த நடவடிக்கை பத்திரிகையாளர் நலன் கருதி அவர்கள் வாழ்வாதாரத்திற்காக நலவாரியம் அமைத்துள்ள தமிழக அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளதாக பல்வேறு பத்திரிகையாளர்கள் சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

முதல்வர் ஸ்டாலின் இதில் தலையிட்டு பாதிக்கப்பட்ட மதுரை பத்திரிகையாளர்களின் நலன் காக்க வேண்டும் எனவும் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.


சலுகையோ மானியமோ இல்லை:


பிரஸ் கிளப் ஆப் மதுரை சங்க தலைவர் ஜெயபிரகாஷ்:

மதுரையில் எங்களுக்கு சலுகையோ, மானியமோ அளிக்கப்படவில்லை. காலக்கிரையத்தில் பெற்றோம். பத்திரிகையாளர் அனைவரும் வட்டிக்கு கடன் பெற்றும், நகைகளை அடமானம் வைத்தும் தான் ரூ.ஐந்தரை லட்சம் தயார் செய்து அரசுக்கு செலுத்தினோம். தவறான ஆணையில் தளர்வு கேட்டு முதல்வருக்கு கோரிக்கை வைத்து இருந்தோம். அந்த நேரத்தில் பட்டாவை ரத்து செய்து கலெக்டராக இருந்த அனீஷ்சேகர் எங்களை பழிவாங்கி மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளார். முதல்வரை சந்தித்து முறையிட உள்ளோம் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X