கலாசார நிகழ்ச்சியில் மது வினியோகத்திற்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு| High Court orders ban on sale of alcohol at cultural events | Dinamalar

கலாசார நிகழ்ச்சியில் மது வினியோகத்திற்கு தடை உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : மே 27, 2023 | |
மதுரை : ஆடல், பாடல் உள்ளிட்ட கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதியைச் சுற்றிலும் மது அல்லது போதைப் பொருள் வினியோகம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருச்சி மாவட்டம் ஆலாத்துார் சதாசிவம் தாக்கல் செய்த பொதுநல மனு: ஆலாத்துாரில் கோயில் திருவிழாவையொட்டி மே 29 ல் ஆடல், படல் நிகழ்ச்சி, மே 31 ல் கரகாட்டம் நடத்த அனுமதி கோரி திருச்சி எஸ்.பி., திருவெறும்பூர்மதுரை : ஆடல், பாடல் உள்ளிட்ட கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதியைச் சுற்றிலும் மது அல்லது போதைப் பொருள் வினியோகம் செய்யக்கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

திருச்சி மாவட்டம் ஆலாத்துார் சதாசிவம் தாக்கல் செய்த பொதுநல மனு: ஆலாத்துாரில் கோயில் திருவிழாவையொட்டி மே 29 ல் ஆடல், படல் நிகழ்ச்சி, மே 31 ல் கரகாட்டம் நடத்த அனுமதி கோரி திருச்சி எஸ்.பி., திருவெறும்பூர் போலீசில் மனு அளித்தோம். பரிசீலிக்கவில்லை. அனுமதிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா அமர்வு: ஒரு சிறு கிராம கோயில் திருவிழாவில் நடன நிகழ்ச்சி நடத்த பொது நல வழக்கு தொடர்வது எவ்வாறு என்பதை புரிந்து கொள்ள முடியவில்லை. இதுபோல் 84 க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணைக்கு வந்தன. இதில் பொது நலன் உள்ளதா, இவ்விவகாரத்தில் நீதிமன்றத்திற்குரிய அதிகார வரம்பை பயன்படுத்த வேண்டுமா என கேள்வி எழுந்தது.

அடிப்படை உரிமைகள் மீறப்படும்போது பாதிக்கப்பட்ட தரப்பினர் உயர்நீதிமன்றத்தை நாடும் உரிமையை இந்திய அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 226 வழங்கியுள்ளது. ஒரு கலாசார நிகழ்ச்சியை நடத்த அனுமதி வழங்கத் தவறியது (மறுப்பு கூட இல்லை) அரசியலமைப்புச் சட்டம் அளித்துள்ள உத்தரவாதத்தை மீறியதாகாது. இவ்வழக்கு ஆவணங்களை பார்க்கையில் அடிப்படை உரிமை ஒரு துளியளவுகூட மீறப்படவில்லை.

அரசியலமைப்புச் சட்டம் 226 வது பிரிவின் கீழ் பொதுநல வழக்கு என்ற போர்வையில் நிவாரணம் கோருவது தவறானது என தோன்றுகிறது. இவ்வழக்கு விழா அமைப்பாளரால் மட்டும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனிப்பட்ட நலனிற்காக இந்நீதிமன்றத்தின் அதிகார வரம்பை பயன்படுத்தி நிவாரணம் கோரும் இத்தகைய மனுக்களை பொது நல வழக்குகளாக கருதி ஊக்குவிக்க முடியாது.

இந்நீதிமன்றத்தின் பல்வேறு உத்தரவுகளின்படி ஆடல், படல் நிகழ்ச்சிக்கு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்குவது குறித்து தமிழக டி.ஜி.பி., 2018 அக்.,31 மற்றும் 2019 ஏப்.,9 ல் போலீசாருக்கு சுற்றறிக்கைகள் அனுப்பியுள்ளார். ஆடல், பாடலுக்கு அனுமதி கோரி மனு அளிக்கும்போது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.

பொது இடங்களில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிப்பது அல்லது அனுமதி வழங்காமல் இருப்பதில் நிர்வாகக் கடமையை நிறைவேற்றும் பொறுப்பை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீண்டும் மீண்டும் கைவிட்டு வருகின்றனர். இதன் விளைவாக போலீசாருக்கு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கலாகின்றன. இத்தகைய நடவடிக்கையானது அரசியலமைப்புச் சட்டப்படி அமைக்கப்பட்ட இந்நீதிமன்றத்தின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் உள்ளது.

இந்நீதிமன்றம் கீழ்க்கண்ட வழிகாட்டுதல்களை வழங்குகிறது.

*கோயில் திருவிழாவுடன் தொடர்புடைய கலாசார நிகழ்ச்சிகளை (ஆடல், பாடல்) நடத்த அனுமதி கோரி மனு அளித்த தேதியிலிருந்து ஏழாவது நாளில் அதிகாரிகள் அனுமதி வழங்கவோ அல்லது நிராகரிக்கவோ நடவடிக்கை எடுக்கவில்லை எனில், எட்டாவது நாளில் அனுமதிக்கப்பட்டதாக கருதப்படும்.

*அனுமதியின் பேரில் விழாக் குழுவினர் கோயில் அல்லது சம்பந்தப்பட்ட திருவிழாவிற்கு தொடர்புடைய கலாசார நிகழ்ச்சிகள் மட்டுமே நடத்தப்படுவதையும், ஆபாசமான காட்சி, நடனங்கள் எதுவும் இடம்பெறாமல் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

*நிகழ்ச்சி இரவு 10:00 மணிக்கு மேல் தொடரக்கூடாது.

*கலாசார நிகழ்ச்சியில் பங்கேற்கும் பெண்களை ஆடை வடிவிலோ அல்லது வேறு வகையிலோ அல்லது ஆபாசமான அல்லது கண்ணியமற்ற முறையில் சித்தரிக்கக்கூடாது.

*இரட்டை அர்த்த பாடல்களை இசைக்கக்கூடாது.

*கலாசார நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மது அல்லது போதைப் பொருள் வினியோகம் செய்யக்கூடாது.

*ஏதேனும் நிபந்தனைகளை மீறும் பட்சத்தில், சட்டப்படி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கலாம். விதிமீறலுக்கு விழா குழு அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

இந்த உத்தரவை அனைத்து மாவட்ட எஸ்.பி.,களுக்கும் அனுப்பப்படுவதை அரசு வழக்கறிஞர் உறுதி செய்ய வேண்டும். வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
Dinamalar iPaper -->


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X