மதுரை : ஆக்கிரமிப்பு புகார் அளித்தால் காலவரையின்றி நிலுவையில் வைத்திருக்காமல் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்துார் அருகே கீழக்கோட்டை ஓடையில் ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிடக்கோரி பாண்டி என்பவர் மனு செய்தார்.
நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.டி.ஆஷா அமர்வு: ஆக்கிரமிப்பை அகற்ற திண்டுக்கல் கலெக்டர், ஆத்துார் தாசில்தாரிடம் மனுதாரர் மனு அளித்துள்ளார். பரிசீலிக்காததால் நீதிமன்றத்தை நாடியுள்ளார். மனு அளித்தால் காலவரையின்றி நிலுவையில் வைத்திருக்கக்கூடாது. தகுதி அடிப்படையில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டிய கடமை உள்ளது என்பதை அதிகாரிகளுக்கு சுட்டிக்காட்ட வேண்டிய அவசியமில்லை. பரிசீலிக்காதது கடமை தவறிய செயல். மனுவை தாசில்தார் 3 மாதங்களில் பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டனர்.
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே மழவராயனேந்தலில் நீர்வரத்து கால்வாயை மீட்டு பழைய நிலைக்கு கொண்டுவர உத்தரவிடக்கோரி ராஜாராம் என்பவர் மனு செய்தார்.
நீதிபதிகள், 'மனுதாரர் அனுப்பிய மனுவை சிவகங்கை கலெக்டர் தகுதி அடிப்படையில் பரிசீலித்து 3 மாதங்களில் தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,' என்றனர்.