புதுடில்லி: பிரதமர் மோடி தலைமையில் நிடி ஆயோக் 8-வது நிர்வாக கவுன்சில் கூட்டம் டில்லியில் நடந்தது. நிதிஷ்குமார், கெஜ்ரிவால், மம்தா உள்ளிட்ட 7 மாநில முதல்வர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.
கடந்த 2014-ல் பா.ஜ. ஆட்சிக்கு வந்தவுடன் , நாட்டில் அமலில் இருந்த திட்டக்கமிஷனுக்கு மாற்றாக நிடிஆயோக அமைப்பு உருவாக்கப்பட்டது. மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் அமைப்பான இந்த அமைப்பின் உயரிய அமைப்பாக நிர்வாக கவுன்சில் உருவாக்கப்பட்டது. பிரதமர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இக்குழுவில் அனைத்து மாநில முதல்வர்கள், கவர்னர்கள், மத்திய அமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள் கவுன்சிலில் இடம்பெற்றுள்ளனர்.
இந்நிலையில் நிடி ஆயோக் நிர்வாக கவுன்சிலின் எட்டாவது கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் இன்று (மே.27) நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்க அனைத்து மாநில முதல்வர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டன.
புறக்கணிப்பு

ஆனால், பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், டில்லி முதல்வர் கெஜ்ரிவால், பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

உடல்நிலை காரணமாக இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை என அசோக் கெலாட் கூறியுள்ளார். டில்லி நிர்வாகம் தொடர்பான அவசர சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கெஜ்ரிவாலும், பஞ்சாப் அரசின் கோரிக்கைகளை ஏற்காததற்கு எதிர்ப்பு தெரிவித்து பக்வந்த் மானும் பங்கேற்கவில்லை.

பினராயி விஜயன் எந்த காரணத்தையும் தெரிவிக்கவில்லை. இன்றைய கூட்டத்தில் எந்த பயனும் இல்லை என நிதிஷ்குமார் கூறியுள்ளார்.
வெளிநாடு பயணம் மேற்கொண்டுள்ளதால், முதல்வர் ஸ்டாலின் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
முன்னரே ஒப்புக் கொண்ட நிகழ்ச்சி காரணமாக நிடி ஆயோக் கூட்டத்தில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் கலந்து கொள்ளவில்லை.
மாநிலங்களுக்கு இழப்பு
முதல்வர்கள் புறக்கணிப்பு தொடர்பாக மத்திய அரசு வட்டாரங்கள் கூறுகையில், நிடி ஆயோக் கூட்டத்தை முதல்வர்கள் புறக்கணிப்பது என்பது மாநிலத்தின் வளர்ச்சியை புறக்கணிப்பதற்கு சமம். 100க்கணக்கான முக்கிய விஷயங்கள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளது. இந்த கூட்டத்தில் முதல்வர்கள் பங்கேற்கவில்லை என்றால், மாநிலத்திற்கு தான் இழப்பு.
சிறு குறு தொழில், உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு, பிரச்னைகளை குறைத்தல், பெண்கள் அதிகாரம், சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து, திறன் மேம்பாடு, உள்ளிட்ட விஷயங்கள் குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
இதில் எடுக்கப்படும் முடிவுகள் மற்றும் ஆலோசனைகளில் சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் அம்மாநில மக்களின் கருத்துகள் பிரதிபலிக்காது. முந்தைய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அமல்படுத்தப்பட்டு, செயல்படுத்தப்பட்டுள்ளதற்கான வரலாறுகள் உள்ளன. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.
ஏற்க மறுப்பு

சிவசேனாவின் உத்தவ் அணியை சேர்ந்த உத்தவ் தாக்கரே கூறுகையில், பா.ஜ., ஆளாத முதல்வர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்காதது, மத்திய அரசு அவர்களை சரியாக நடத்தாததை காட்டுகிறது. மத்திய அரசுக்கு அடிபணியாதவர்களின் கோரிக்கைகளை, நிடி ஆயோக் ஏற்க மறுக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.