சல்லி சல்லியாக மாறிய தார்ச்சாலை
திருத்தணி ஒன்றியம், வீரகநல்லுார் ஊராட்சியில் இருந்து, நெட்டேரி கண்டிகை மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வழியாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது.
இந்த சாலையை முறையாக பராமரிக்காததால் தற்போது, ஜல்லி கற்களின் குவியலாகவும், மேடு பள்ளமாகவும் சாலை சிதிலமடைந்துள்ளது.
இரவு நேரத்தில் இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, வயல்வெளிக்கு நடந்து செல்வோரும் சாலை மேடு பள்ளங்களில் விழுந்து, விபத்தை சந்திக்கின்றனர்.
பெரிதும் பழுதடைந்துள்ள இந்த தார்ச்சாலையை சீரமைக்க வேண்டும் என, பலமுறை கோரிக்கை வைத்தும், ஒன்றிய நிர்வாகம் மெத்தனமாக உள்ளது. எனவே கலெக்டர் நேரில் பார்வையிட்டு, இந்த சாலையை மக்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் மாற்ற வேண்டும்.
- -எஸ்.வெங்கடேசன், நெட்டேரி கண்டிகை.
மண் லாரியால் விபத்து அபாயம்
கனகம்மாசத்திரம் சாலை வழியாக சவுடு, களி மண் எடுத்துச் செல்லும் 'டிப்பர்' லாரிகள், அளவுக்கு அதிகமாக பாரம் ஏற்றி, சென்னை -- திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக திருவள்ளூர், சென்னைக்கு சென்று வருகின்றன.
இந்நிலையில் லாரியில் தார்ப்பாய் மூடாமல், அசுர வேகத்தில் செல்லும்போது, மண் துகள்கள், வாகன ஓட்டிகளின் கண்களில் விழுகின்றன. அளவுக்கு அதிகமாக மண் ஏற்றிச் செல்லும் போது, மணல் கீழே சிந்தியபடி செல்கின்றன. தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஜி.கோகுல், சின்னம்மாபேட்டை.