கும்மிடிப்பூண்டி: சென்னை - - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையோரம், கும்மிடிப்பூண்டி கன்னியம்மன் கோவில் பகுதியில், ஈசா பெரிய ஏரிக்கரையை ஒட்டி, தினசரி கழிவுகள் குவிக்கப்பட்டு வருகின்றன.
சுற்றியுள்ள ஊராட்சி நிர்வாகங்கள் மட்டுமின்றி, தனியார் பலர், தினசரி கழிவுகளை நீண்ட பரப்பில் குவித்து, எரித்து வருகின்றனர். இதனால் எப்போதும் நுர்நாற்றம் வீசும் அப்பகுதியின் சுற்றுச்சூழல், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
எரிக்கப்படும் கழிவுகளில் இருந்து கிளம்பும் சாம்பல் துகள்கள், ஏரி நீரில் கலந்து மாசு அடைவதுடன், அவ்வழியாக பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட காரணமாக இருக்கிறது.
கும்மிடிப்பூண்டி நகரின் பொலிவை சீர்குலைப்பதுடன், சுவாச பிரச்சனை ஏற்படுத்துவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
கும்மிடிப்பூண்டியில் இயங்கி வரும் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தினர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய நெடுஞ்சாலை ஓரம் கழிவுகள் குவித்து எரிப்பவர் மீது, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.