சென்னை: தொழிலாளர் வருங்கால வைப்பு நிறுவனம் சார்பில் 'வைப்பு நிதி உங்கள் அருகில்' முகாம் நாளை நடக்கிறது.
இது குறித்து, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி ஆணையர் பி ஆண்ட்ரூ பிரபு வெளியிட்ட செய்தி குறிப்பு:
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சார்பில், 'நிதி ஆப்கே நிகட் - 2.0' என்ற 'வைப்பு நிதி உங்கள் அருகில்' முகாம் நாளை காலை 9:00 முதல் 5:45 மணி வரை நடைபெற உள்ளது.
முகாம்கள், சென்னை வடக்கு சார்பில், ராயப்பேட்டை நியூ கல்லுாரி வளாகத்திலும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு, பூந்தமல்லி நகராட்சி அலுவலகத்திலும் நடைபெற உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்திற்கு, கிழக்கு தாம்பரம், பாரத மாத தெருவில் உள்ள ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப்பள்ளியிலும், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ஒரகடம், சிப்காட் போஸ் எலக்ட்ரிக் டிரைவ்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திலும் நடைபெற உள்ளது.
அதேபோல், வேலுார், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்துார் ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலிலும் நடைபெறுகிறது.
இதில், இ.பி.எப்., தொடர்பான 'ஆன்லைன்' சேவைகள் மற்றும் குறைகள் குறித்து கலந்துரையாடல் நடைபெறும். நிகழ்வில் பங்கேற்க நேரடியாகவும், க்யு.ஆர்.குறியீடு மூலமாகவும் பதிவு செய்யலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.