மே 28, 1915
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள எதிர்கோட்டை கிராமத்தில், கோபாலனின் மகனாக, 1915ல் இதேநாளில் பிறந்தவர் ஜி.ராமானுஜம். இவர், 'ஹிந்துஸ்தான் மஸ்துார் சேவக் சங்கம்' மற்றும், மஹாத்மா காந்தியால் ஆமதாபாதில் நிறுவப்பட்ட, மஜூர் மகாஜனில் தொழிற்சங்க பணிகள் தொடர்பாக பயிற்சி பெற்றார். பின், ௧௯௪௭ல், ஐ.என்.டி.யு.சி., என்ற, இந்திய தேசிய தொழிற்சங்க காங்கிரஸ் உருவாக காரணமாக இருந்தார். ஐ.என்.டி.யு.சி.,யின் தலைவர், செயலர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்தார்.
பின், மும்பை பருத்தி கழகம், மத்திய தொழிலாளர் கல்வி வாரியத்தின் தலைவராகவும், தொழில் நிதி கழகம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி கழகம், ரிசர்வ் வங்கி உள்ளிட்டவற்றின் இயக்குனராகவும் செயல்பட்டார். 1994ல், கோவா கவர்னராகவும், பின், ஒடிசா மாநில கவர்னராகவும் பணியாற்றினார். காந்திய வழியில் தொழிற்சங்க பிரச்னைகளுக்கு தீர்வு எனும் பொருளில், பல நுால்களை எழுதிய இவர், 2001 ஜூன், 26ல் மறைந்தார்.
'பத்மபூஷண்' உள்ளிட்ட விருதுகளைப் பெற்ற, வலிய சிந்தனையால் எளிமையாக வாழ்ந்த, தொழிற்சங்கவாதியின் பிறந்த தினம் இன்று!