வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
தெருநாய்களை பார்க்கும் சிலர் முகம் சுழிப்பதும், அவைகள் மீது கற்களை வீசி விரட்டி அடிப்பதும் தொடர்ந்து நடக்கிறது. ஆனால், கர்நாடகா இளைஞர் ஒருவர், தெருநாய்களின் பாதுகாவலராக உள்ளார்.
உடுப்பி மாவட்டம் கார்கலா தாலுகா, முதார் கிராமத்தை சேர்ந்தவர் விரஞ்சய் ஹெக்டே, 35. இவர் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர். 'அஹிம்சா' என்ற பெயரில், தனது நண்பர்கள் உதவியுடன், செல்ல பிராணிகள் பராமரிப்பு அறக்கட்டளை ஒன்றை நடத்துகிறார்.
இந்த அறக்கட்டளையில் தெருநாய்கள், சாலையில் சுற்றித்திரியும் பூனைகளை வளர்க்கிறார். தெருநாய்கள், பூனைகளுக்கு சரியான நேரத்தில் உணவு, பால் வழங்குகிறார். சாலையில் அடிபட்டு கிடக்கும், நோயால் பாதிக்கப்பட்ட தெருநாய்களை கண்டறிந்து, சொந்த சிகிச்சையில் மருத்துவ சிகிச்சையும் அளிக்கிறார். இதனால் தெருநாய்கள், பூனைகள் அவரை சுற்றி வருகின்றன.
இதுகுறித்து விரஞ்சய் ஹெக்டே கூறியதாவது:
வசதி படைத்தவர்கள் அதிக விலை கொடுத்து, செல்ல பிராணிகளை வாங்கி வீடுகளில் வளர்க்கின்றனர். ஆனால் சாலையும் சுற்றும் தெருநாய்கள், பூனைகளை யாரும் பெரிதாக கண்டுகொள்வது இல்லை. சிறுவனாக இருந்த போதே தெருநாய்கள், பூனைகளை பராமரிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது.
கடந்த 15 ஆண்டுகளாக சாலையில் அடிப்பட்டு கிடக்கும், தெருநாய்கள் மீது தனி கவனம் செலுத்துகிறேன். காயம் அடையும், நோயால் பாதிக்கப்படும் தெருநாய்களுக்கு, சிகிச்சை கிடைக்க வேண்டும் என்பது எனது நோக்கம்.
எனது வருமானம், நண்பர்களின் உதவியுடன் அறக்கட்டளை நடத்துகிறேன். தற்போது எனது அறக்கட்டளையில் 350 தெருநாய்கள், 50 பூனைகளை பராமரித்து வருகிறேன். வரும் நாட்களில் ஒன்பது ஏக்கர் நிலத்தில், தெருநாய்கள், பூனைகளை பராமரிக்க பெரிய இடம் கட்டவும் திட்டமிட்டு உள்ளேன்.
எனது அறக்கட்டளையில் உள்ள, பெண்களும் சாலையில் சுற்றித்திரியும் தெருநாய்களை, அடையாளம் கண்டு சரியான நேரத்தில் உணவு அளிக்கின்றனர். தெருநாய்களை பராமரிக்க அனைவரும், முன்வர வேண்டும்.
சாலையில் செல்லும் தெருநாய்கள் மீது, சிலர் வேண்டும் என்றே கல் அடிப்பர். இத்தகையை நிகழ்வுகள் தவிர்க்கப்பட வேண்டும். தெருநாய்களை முறையாக கவனித்தால், அவைகள் நமக்கு பாதுகாவலனாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நமது நிருபர் -