நடிகராகவும், இசையமைப்பாளராகவும் தமிழ் சினிமாவில் சிறகடித்து பறப்பவர், ஜி.வி.பிரகாஷ்குமார். 98 படங்களுக்கு இசை, நடிகராக 15 படங்கள் என, இந்த இளம் வயதிலேயே 'என்னை என்னான்னு நினைச்சீங்க...' என்கிற ரேஞ்சுக்கு, முத்திரை பதித்து வருகிறார்.
சமீபத்தில் கோவைக்கு வந்திருந்த அவருடன் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
ஜி.வி.பிரகாஷ்குமார் நடிகரா, இசையமைப்பாளரா?
இரண்டுமே எனக்கு பிடிக்கும். கலை உலகில் இருப்பதே ஒரு வரம். பாடல் இசையமைப்பது, நடிப்பது இரண்டிலும், 100 சதவீதத்தை கொடுப்பேன். எனக்கு இயற்கை என்ன தருகிறதோ அதை எடுத்துக் கொள்வேன். எனக்கு என்ன வருகிறதோ அதைத் தருவேன். எதையும் திட்டமிட்டு இப்படி செய்ய வேண்டும் என செய்வதில்லை.
கர்நாடக இசை கற்பவர்களுக்கு, மேற்கத்திய இசையிலும், மேற்கத்திய இசை கற்பவர்களுக்கு கர்நாடக இசையிலும் இடமிருக்காது என்று கூறப்படுவது பற்றி...?
அப்படி கூற முடியாது. அது, நீங்கள் தேர்ந்தெடுக்கும் துறையை பொருத்தது. நீங்கள் பாரம்பரிய இசையில் வெற்றி பெற நினைத்தால், கர்நாடக இசை பொருந்தும். கர்நாடக இசை அறிவு இருந்தால் தான் பாடவே முடியும். எது வேண்டுமோ அதில் பயிற்சி செய்தால், தான் வெற்றி பெற முடியும்.
எந்த இடத்தில் நாம் கற்ற கல்வியை பயன்படுத்தப் போகிறோம் என்பதுதான் முக்கியம். ஆனால், அடிப்படையில் கர்நாடக இசை அறிவு சிறிது இருக்க வேண்டும். அது இல்லாமல் உயர முடியாது.
இன்றைய இளைஞர்களின் விருப்பமாக எது உள்ளது. கர்நாடக சங்கீதமா அல்லது மேற்கத்திய இசையா?
இது அவரவர் ரசனையை பொருத்தது. அப்படி பார்த்தால் இன்றைய இளைஞர்களுக்கு நாட்டுப்புற பாடல்கள் தான் அதிகம் பிடிக்கிறது. நாட்டுப்புற இசையையும், மேற்கத்திய இசையையும் கலந்தே இன்றைய பெரும்பாலான திரைப்பட பாடல்கள் வருகின்றன. இசையை கதைதான் தீர்மானிக்கும். கதையும், காட்சியும் தான் ஒரு பாட்டு எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும்.
உங்கள் இலக்கு இசையா அல்லது நடிப்பா?
சினிமா என்பது, ஒரு ஆசிர்வாதம். அதில் நாம் இருப்பதே மிகப்பெரிய விஷயம். நாம் நேர்மையாக பணிபுரிகிறோம். கடின உழைப்பு, நமக்கு மீண்டும் வாய்ப்பை அளிக்கிறது.
பின்னணி பாடகியான மனைவியை, உங்கள் இசையில் பாட வைக்கும் போது அவர்களை வேலை வாங்குவது எப்படி இருக்கும்?
இசை என்று வரும் போது யாராக இருந்தாலும், இசையமைப்பாளர், பாடகர் என்ற முறையில் தான் அணுகுவேன். புதிதாக ஒருவரை பாட வைக்கும் போது, அவர் யார் என்றே தெரியாது. புதியவர்களின் திறமையுடன் இணைந்து நாம் பணிபுரியும் போது, புதிய அனுபவம் கிடைக்கும்.
புதியவர்களுடன் பணிபுரியும் போது தோல்வி ஏற்படலாம். ஆனால், அதில் நமக்கு புதிய தகவல்கள் கிடைக்கும். தோல்வியை பற்றி யோசித்தால், புதிய அனுபவங்கள் கிடைக்காது.
இளைஞர்களுக்கு வாய்ப்புகள் எவ்வாறு உள்ளது?
கொட்டிக்கிடக்கிறது. சமூக வலைதளங்கள் மிகப்பெரிய வாய்ப்பாக உள்ளன. இதில் நல்லது, கெட்டது என, இரண்டும் உள்ளது. நமக்கு ஒரு திறமை இருக்கிறது என்றால் அதை சமூகவலைதளங்களில் வெளிப்படுத்தும் போது அது, உடனடியாக வைரலாகிறது.
அதை சரியான முறையில் பயன்படுத்துகிறோமா என்பது தான் கேள்வி. வாய்ப்பை நாம் எப்படி அடைய போகிறோம் என்பது முக்கியம். நீங்கள் போகும் பாதை எது என்பதை தெரிந்து செல்ல வேண்டும். போகும் பாதையில் விடாமல் முயற்சித்தால், நாம் நினைக்கும் இடத்தை நிச்சயம் சென்றடைய முடியும். இதை செய்தால் நாம் அனைவரும் சாதிக்க முடியும்.
எதிர்மறையான எண்ணங்களை விரட்ட, எந்தவிதமான இசை சரியாக இருக்கும்?
பொதுவான இசை எல்லாம் பயன்படும். ஒவ்வொருவருக்கும் ஒரு விருப்பம் இருக்கும். ஒவ்வொருவருக்கும் எது பிடிக்கிறது என்பதை கண்டுபிடிக்க வேண்டும். சில இடங்களில் அமைதி தேவைப்படும். அதை மாற்றக்கூடாது.
நம் ரசனையை அவர்கள் மீது திணிக்கக் கூடாது. காலம் மாறும் போது எண்ணங்களும் மாறுகின்றன. அதை கண்டறிய வேண்டும். நான் இன்னும் தேடலில் தான் இருக்கிறேன். தொடர்ந்து தேடிக் கொண்டே இருக்கிறேன். அந்த தேடல் இருக்கும் வரை தான் புதிய படைப்புகள் கிடைக்கும்.
இன்று ஏராளமான இளைஞர்கள் தனிமையில், மன அழுத்தத்தில் இருக்கின்றனர். மொபைல்போன் எனும் மாயைக்குள் மூழ்கி உள்ளனர். மொபைல்போனை விட்டு வெளியில் வாருங்கள். நண்பர்களை தேடுங்கள், அவர்களுடன் மனம் விட்டு பேசுங்கள். அதேமாதிரி உங்களை நீங்களே ஊக்குவித்துக் கொள்ள வேண்டும். இன்று அனைவருக்குமே எதிர்மறையான எண்ணங்கள் அதிகளவில் இருக்கின்றன. தன்னம்பிக்கையை இழக்காதீர்கள். உங்கள் வாழ்க்கையை வாழுங்கள். மற்றவர்கள் நம்மை ஊக்குவிக்க மாட்டார்கள். எதிர்பார்க்கவும் கூடாது. உங்கள் இலக்கை நோக்கி பயணித்தால், வெற்றி தேடி வரும். வெற்றி என்பது கடின உழைப்பால் மட்டுமே வரும். அவ்வாறு வெற்றி கிடைக்கவில்லை எனினும், சோர்ந்து விடக்கூடாது. தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். என்றாவது ஒருநாள் அது நம் கதவை தட்டும்; வேறு ஒரு உலகுக்கு கொண்டு செல்லும்.