அடுத்த இரண்டு ஆண்டுகளில், மின் வாகன பயன்பாடு நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு அதிகரிக்கும் என்று, சென்னையில் நடைபெறும் மின் வாகன கண்காட்சி மற்றும் கருத்தரங்கில் பேசியவர்கள் குறிப்பிட்டனர்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், 'இவி டைனமிக்ஸ் - 2023' என்ற தலைப்பில், மின் வாகனங்கள் மற்றும் அது தொடர்பான சாதனங்கள் கொண்ட கண்காட்சி நடந்து வருகிறது.இந்த கண்காட்சியில், மின் சைக்கிள் முதல் கனரக வாகனம் வரை இடம் பெற்றுள்ளது. சர்வதேச அளவில் உற்பத்தியாகக் கூடிய மின் வாகனங்கள் இடம் பெற்றுள்ள இந்தக் கண்காட்சியில், நாகர்கோவில் நிறுவனம் தயாரித்துள்ள மின் சைக்கிள்,
பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.கண்காட்சியின் ஒரு பகுதியாக நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய மின்வாகன தயாரிப்பு நிறுவனங்களின் நிர்வாகிகள் அமிதாப் சரண், உதய் நவ்ரங், ஹமீத், விஷால் பிரதாப் ஆகியோர் கூறியதாவது..
இந்தியாவில் ஒரு காலத்தில் பிளம்பிங் வேலைக்கு, இரும்பு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்தது. பி.வி.சி., பைப் அறிமுகப்படுத்தப்பட்டபோது, 'என்ன... விளையாடுறீங்களா...' எனக் கேட்டனர்.இன்று, அந்த பி.வி.சி., பைப்தான், 'பிளம்பிங்' தொழிலை ஆள்கிறது, அது போல, வருங்காலத்தில் மின்வாகனம் மட்டுமே இருக்கும், அதற்கேற்ப, நிகழ்காலத்திலேயே மின்வாகனம் குறித்த விசாரிப்புகள், அதிகரித்து வருகின்றன.
இதில், லாபம் மட்டுமின்றி, சுற்றுச்சுழல், ஒலி மாசு ஆகிய பொதுப் பிரச்னைகளும் இல்லை என்பதால், மக்கள் கூடுதலாக அக்கறை காட்டி வருகின்றனர்.நம் நாட்டு மக்கள், எப்போதுமே 'பட்ஜெட்' போட்டு செலவழிப்பவர்கள். பெட்ரோல் விலையை விட டீசல் விலை குறைவாக இருந்தபோது, பல லட்சம் செலவழித்தும் கூட, டீசல் கார்களே வாங்கினர். ஆனால் கிட்டத்தட்ட பெட்ரோலுக்கு நிகராக டீசல் விலை வந்தபிறகு, டீசல் கார்கள் உற்பத்தியையே பல நிறுவனங்கள் நிறுத்தி விட்டன.இது போல, பெட்ரோல் வாகனத்தில் இருந்து மின் வாகனத்திற்கு மாறினால் என்ன லாபம் என்று கணக்கிட்டபடி இருக்கின்றனர். எப்போது இது லாபம் என்று முடிவு செய்கின்றனரோ, அப்போது, மின் வாகனம் மட்டுமே வாங்குவர். அந்த நிலையை நோக்கியே, மின் வாகன உற்பத்தி சென்று கொண்டு இருக்கிறது.
பேட்டரியின் அளவு, சார்ஜிங் நேரம், விலை என எல்லாவற்றிலும் மாற்றம் நிகழ்ந்தபடி இருக்கிறது. உலகம் முழுவதும் இதற்கான ஆராய்ச்சி நடந்து கொண்டே இருக்கிறது.தீ பிடிக்கிறது என்ற புகார்களை, மின் வாகனங்கள் கடந்து விட்டன.
இந்த மின் வாகன கண்காட்சி, ஞாயிற்றுக்கிழமையான இன்றுடன் நிறைவு பெறுகிறது; அனுமதி இலவசம். - நமது நிருபர் -