சென்னை: 'விசாரணைக்கு அழைக்கப்படுபவரை, போலீசார் துன்புறுத்தக் கூடாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சேலத்தைச் சேர்ந்த ரஜினி என்பவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'எனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கில், சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் துன்புறுத்தக் கூடாது' என, உத்தரவிடக் கோரியிருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிபதி சத்திகுமார் சுகுமார குருப் பிறப்பித்த உத்தரவு:
புகார் குறித்து விசாரிக்க போலீசாருக்கு அதிகாரம் உள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு அந்த அதிகாரத்தை செயல்படுத்த வேண்டும்.
போலீஸ் விசாரணையின் ஒவ்வொரு கட்டத்திலும், பாதுகாவலராக மாஜிஸ்திரேட் இருந்தாலும், புலன் விசாரணையில் குறுக்கிட அவருக்கு அதிகாரம் இல்லை. எனவே, போலீஸ் துன்புறுத்தல் தொடர்பாக, ஏராளமான மனுக்கள் தாக்கல் செய்யப்படுகின்றன.
பொதுவாக உயர் நீதிமன்றமும், போலீஸ் அதிகாரி நடத்தும் புலன் விசாரணையில் குறுக்கிடாது. அதேநேரம், விசாரணை என்ற பெயரில் போலீசார் துன்புறுத்தினால், அதை பார்த்துக் கொண்டும் இருக்காது.
இந்த வழக்கைப் பொறுத்தவரை, விசாரணைக்கு அழைத்து, மனுதாரருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதற்கு மதிப்பளித்து, போலீஸ் அதிகாரி முன் அவர் ஆஜராக வேண்டும்.
போலீஸ் துன்புறுத்தல் குற்றச்சாட்டை தவிர்க்க, சில வழிமுறைகள் பிறப்பிக்கப்படுகின்றன. புகாரில் கூறப்பட்ட நபரை அல்லது சம்பவம் தொடர்பான சாட்சியை அழைக்க வேண்டும் என்றால், அவர்களுக்கு போலீஸ் அதிகாரி எழுத்துப்பூர்வமாக சம்மன் அனுப்ப வேண்டும். அதில், ஆஜராகும் தேதி, நேரம் குறிப்பிட வேண்டும்.
விசாரணை நிகழ்வுகளை, போலீஸ் நிலைய டைரியில் பதிவு செய்ய வேண்டும். விசாரணைக்கு அழைக்கப்படுபவரை துன்புறுத்தக் கூடாது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.