வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்:... ..
அ.சேகர், கடலுாரிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
சென்னையில், தி.மு.க., தலைமை அலுவலகத்தில் நடந்த, அக்கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டத்தில், 'மாவட்டந்தோறும், அரசின் அனுமதி பெற்று, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மார்பளவு சிலை மற்றும் முழு உருவச்சிலை அமைக்க முயற்சிக்க வேண்டும்' என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
![]()
|
கருணாநிதியின் சிலைகளை, தி.மு.க.,வினர் தங்களின் சொந்த செலவில், தங்களுக்கு சொந்தமான இடங்களிலோ அல்லது கட்சிக்கு சொந்தமான இடங்களிலோ, பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் வைத்துக் கொள்ளலாம்; அதில், எந்தப் பிரச்னையும் இல்லை. அந்தச் சிலைகளுக்கு தினமும் மாலையிட்டு, தி.மு.க.,வினர் தங்களின் ஆயுள் முழுதும் வணங்கியும் மகிழலாம்.
இதனால், சிலை தயாரிக்கும் சிற்பிகளும், மாலைகள் கட்டி விற்போரும் பலன் அடைவர். அதே நேரத்தில், பொது இடங்களில் கருணாநிதி சிலைகளை நிறுவுவதையும், அவற்றை அரசு செலவில் நிறுவுவதையும் தவிர்க்க வேண்டும்.
உ.பி.,யில் மாயாவதி முதல்வராக பதவி வகித்த காலத்தில், தங்கள் கட்சியின் நிறுவனர் கன்ஷிராம் சிலைகளையும், கட்சியின் சின்னமான யானை சிலைகளையும், மாநிலம் முழுதும் பல்வேறு இடங்களில் நிறுவினார்.
பொது இடங்களில் மக்கள் வெறுக்கும் வகையில், இந்தச் சிலைகளை நிறுவியதால், நீதிமன்றத்தின் கண்டனத்திற்கு ஆளானார்.
அது மட்டுமின்றி, ஒரு கட்டத்தில் ஆட்சி அதிகாரத்தில் கோலோச்சிய மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, கடந்த இரு சட்டசபை தேர்தல்களிலும், லோக்சபா தேர்தல்களிலும் படுதோல்வி கண்டு, தற்போது, அந்த கட்சி எங்கே என்று தேடிப்பிடிக்க வேண்டிய நிலையில் உள்ளது.
சமீபத்தில், உ.பி., மாநிலத்தில் நடந்த உள்ளாட்சி தேர்தலில் கூட, அந்தக் கட்சி எந்த இடத்திலும் வெற்றி பெறவில்லை. இதற்கெல்லாம் மக்கள் வெறுக்கும் வகையில், ஏராளமான இடங்களில், அவர் சிலைகளை நிறுவியதே காரணம்.
மாயாவதியின் பாணியில், தற்போது ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க.,வினர், மெரினா அருகே கடலில், பேனா சின்னம் அமைக்க முற்பட்டுள்ளதோடு, மாவட்டம் தோறும் கருணாநிதியின் சிலைகள் அமைக்கவும் தீர்மானித்துள்ளனர்; இது, மக்கள் மத்தியில் எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்பது தெரியவில்லை.
![]()
|
ஒருவேளை, உ.பி., மக்களை போன்று, தமிழக மக்களும் இந்த சிலைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆரம்பித்தால், தி.மு.க., மீது வெறுப்பை காட்டத் துவங்கினால், மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி காணாமல் போனது போல, தமிழகத்திலும், தி.மு.க., காணாமல் போகும் சூழ்நிலை உருவாகும். அதனால், மாயாவதி பாணியை கடைப்பிடிக்காமல் தவிர்ப்பதே, முதல்வர் ஸ்டாலினுக்கு நல்லது.