வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு: தமிழகத்துக்கு பெருமை, பண்பாடு, கலாசாரத்துக்கு புகழ் என்ற வகையில், பார்லிமென்ட் கட்டடத்தில் செங்கோல் அமைய உள்ளது. எனவே, இதற்கான மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நடத்திய செய்தியாளர் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்றதில், எங்களுக்கு எந்த சங்கடமும், வருத்தமும் இல்லை. அதே நேரத்தில், பார்லிமென்ட் கட்டடத்தை ஜனாதிபதி தான் திறக்க வேண்டும் என்ற எங்கள் கருத்தில், எந்த மாற்றமும் இல்லை.
![]()
|
டவுட் தனபாலு: புதிய பார்லிமென்டில் செங்கோல் வைப்பதன் வாயிலாக, தமிழகத்தின் பெருமையை, மோடி அரசு எட்டாத உயரத்துக்கு எடுத்து சென்றுள்ளது... ஒரு காலத்துல, காங்., கூட்டணி குறித்து, உங்க, 'மாஜி' தலைவர் கருணாநிதி சொன்ன, 'கூடா நட்பு கேடாய் முடியும்' என்ற கதையாக, அவங்களுடன் சேர்ந்து நீங்களும் எதிர்ப்பு லாலி பாடுறீங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
பா.ஜ.,வை சேர்ந்த, மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர்: புதிய பார்லிமென்ட் திறப்பு என்பது, திருவிழா போல கொண்டாடப்பட வேண்டிய விஷயம். ஆனால், எதிர்க்கட்சியினர் இதை அரசியலாக்குகின்றனர்; எல்லாவற்றுக்கும் ஓர் எல்லை உண்டு.
டவுட் தனபாலு: நீங்க சொல்வதில், எந்த மாற்றுக் கருத்தும் இல்லை... இந்த திருவிழாவை புறக்கணிக்கிற எதிர்க்கட்சியினரை, அடுத்த வருஷம் நடக்கப் போற லோக்சபா தேர்தல் திருவிழாவுல, ஜனங்க புறக்கணிச்சிடுவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை: என் மகன் படிக்கும் பள்ளியில், மூன்று மொழிகள் பயிற்றுவிக்கப்படுகின்றன. அவர், 20 வயதில் ஐந்து மொழிகள் கற்றிருக்க வேண்டும் என்பதே, என் ஆசை. தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும், இதேபோல பல மொழிகள் கற்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே, என் விருப்பம்.
டவுட் தனபாலு: 'ஆசைப்படலாம்... பேராசைப்படக் கூடாது'ன்னு பெரியவங்க சொல்லுவாங்க... அந்த மாதிரி, தமிழகத்துல, 'திராவிட மாடல் அரசு' இருக்கிற வரைக்கும், இவரது விருப்பம் கானல் நீராகவே காட்சியளிக்கும் என்பதில், 'டவுட்'டே இல்லை!
lll
த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்: பார்லிமென்டிற்கு என புதிய கட்டடம், 75 ஆண்டு களுக்கு பின், நம் நாட்டை சேர்ந்த வல்லுனர்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. தற்போது, அதன் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என, எதிர்க்கட்சிகள் கூறுவது அரசியல் காரணங்களாகும். பார்லிமென்ட் புதிய கட்டடத்தை, பிரதமர் மோடி திறந்து வைப்பதில் எந்தத் தவறும் இல்லை.
![]()
|
டவுட் தனபாலு: பிரதமர் மோடிக்கு சர்வதேச அளவில் கிடைக்கிற புகழை பார்த்து, இங்குள்ள எதிர்க்கட்சிகள் வயிற்றெரிச்சலில் இருக்கின்றன என்பது தான் உண்மை... அதனால தான், இதுபோன்ற நொண்டி சாக்குகளை சொல்லி, விழாவை புறக்கணிக்கிறாங்க என்பதிலும், 'டவுட்'டே இல்லை!
lll
பத்திரிகை செய்தி: திருச்சி மன்னார்புரத்தில், 'எல்பின்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனம், முதலீட்டாளர்களுக்கு அதிக வட்டி தருவதாக கூறி, 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோரிடம், 963 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது. வி.சி., கட்சியைச் சேர்ந்த திருச்சி மாநகராட்சி கவுன்சிலர் பிரபாகரன், மோசடிக்கு மூளையாக செயல்பட்டது தெரியவந்துள்ளது. தலைமறைவாக இருந்த அவரை, போலீசார் கைது செய்துள்ளனர்.
டவுட் தனபாலு: 'ஆரூத்ரா மோசடியில், பா.ஜ.,வினருக்கு பங்குள்ளது' என, தி.மு.க.,வினர் திருகுதாளம் பாடினாங்களே... இப்ப, அவங்க கூட்டணி கட்சியின் கவுன்சிலரே, மோசடி நிதி நிறுவன வழக்குல சிக்கியிருக்காரே... இதையே காரணம் காட்டி, அந்தக் கட்சியை கூட்டணியில இருந்து, தி.மு.க., கழற்றி விடுமா என்ற, 'டவுட்'டுக்கு விடை கிடைக்குமா?
lll
பத்திரிகை செய்தி: உள்ளாட்சி துறை ஒத்துழைப்பு இல்லாததால், அரசு பள்ளிகளின் துப்புரவு பணிகளை, தனியாரிடம் ஒப்படைக்க, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
டவுட் தனபாலு: 'அரசு துறைகளை தனியார் மயமாக்காதீங்க'ன்னு ஊழியர் சங்கங்கள் எல்லாம், ஒருபக்கம் கூப்பாடு போடுகின்றன... அதற்கு முன், தங்களது ஊழியர்களிடம், 'உங்களது வேலையை ஒழுங்கா செய்யுங்க' என, அறிவுரை தந்தாலே, இந்த மாதிரி தனியார் மயங்களை தவிர்க்க முடியும் என்பதில், 'டவுட்'டே இல்லை!