வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
''உலகத் தமிழ் மாநாடு நடத்துற விவகாரம், சர்ச்சையாகி இருக்குதுங்க...'' என்றபடியே, வந்தமர்ந்தார் அந்தோணிசாமி.
![]()
|
''விபரமா சொல்லுங்க பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் சார்புல தான், உலகத் தமிழ் மாநாடுகளை நடத்திட்டு வந்தாங்க... இந்த அமைப்பில், மூத்த தமிழ் அறிஞர்கள் இல்லாததால, சில ஆண்டுகளா மாநாடு நடக்கலைங்க...
''அந்த அமைப்பு, இப்ப ரெண்டு குழுக்களா வேற பிரிஞ்சு கிடக்குது... ஒரு குழு சிங்கப்பூரிலும், மற்றொரு குழு, சென்னையிலும் உலகத் தமிழ் மாநாட்டை நடத்த திட்டமிட்டு இருக்குதுங்க...
''சென்னை, செம்மஞ்சேரியில் இருக்கிற ஆசியவியல் நிறுவன வளாகத்தில், ஜூலை,7 முதல், 9ம் தேதி வரை மாநாட்டை நடத்த இருக்கிறதா, ஒரு குழுவினர் அறிவிச்சிருக்காங்க...
''இந்த ஆசியவியல் நிறுவனத்தை நடத்தி வரும் ஜான் சாமுவேல் என்பவர், நிறுவனத்தை துவங்க, மத்திய அரசிடமும், வெளிநாட்டு தமிழ் அமைப்புகள், அறிஞர்களிடமும் நிதி வாங்கி இருக்காருங்க...
''ஆனா, அதுக்கு முறையா கணக்கு காட்டலை... அதோட ஆண்டறிக்கையும் சமர்ப்பிக்காம விட்டதால, தென்சென்னை பதிவுத் துறை சங்கங்களின் பதிவுப் பட்டியலில் இருந்து, ஆசியவியல் நிறுவனத்தை நீக்கிட்டாங்க... இவ்வளவு பிரச்னைக்குரிய அமைப்பின் சார்புல, உலகத் தமிழ் மாநாடு அறிவிப்பு வெளியானது, சர்ச்சையாகி இருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''கோவை ஆவின் நஷ்டத்துல ஓடுது வே...'' என்ற அண்ணாச்சியே தொடர்ந்தார்...
''கோவை ஆவினுக்கு, 'பேக்கிங்' இயந்திரங்கள் மற்றும், 'மெட்டீரியல்' வாங்கினாவ... தேவையான அளவு வாங்காம, கோடிக்கணக்குல செலவு செஞ்சு, இன்னும் அஞ்சு வருஷம் உபயோகிக்கிற அளவுக்கு வாங்கி குவிச்சிட்டாவ வே...
''இதுக்காக, ஆவின் வங்கி கணக்கில் இருந்த பணத்தை மொத்தமா துடைச்சு எடுத்துட்டாவ... இந்த கொள்முதலை செஞ்ச அதிகாரி, சொந்த பாக்கெட்டை நிரப்பிக்கிட்டாரு வே...
''சத்தமில்லாம, தனக்கு நெருக்கமான உயரதிகாரிகள் மூலமா, சென்னைக்கு மாறி வந்துட்டாரு... கோவை ஆவின் நிர்வாகம், இப்ப சம்பளம் குடுக்கக் கூட பணம் இல்லாம தவிக்கு வே...'' என்ற அண்ணாச்சியே, ''அட, திருமுருகன் சார், என்ன அங்கனயே நிக்கீய... இங்கிட்டு வாங்க...'' என, நண்பரை அழைத்து நலம் விசாரித்தார்.
''மன்னார்குடி குடும்பத்துக்கு போலீஸ்ல இன்னும், 'வாய்ஸ்' இருக்கு ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார், அன்வர்பாய்.
''சசிகலா ரத்த சொந்தத்தின் வாரிசும், ஜல்லிக்கட்டு சங்க நிர்வாகியின் மதுரை வாரிசும், சமீபத்துல சென்னை நட்சத்திர ஹோட்டல்ல நேருக்கு நேரா அடிச்சுண்டா... இதுல, மன்னார்குடி வாரிசுக்கு அதிக, 'டேமேஜ்' ஆயிடுத்து ஓய்...
''பதிலுக்கு கூலிப்படையை ஏவி, மதுரை வாரிசை பின்னி எடுத்துட்டாளாம்... முகம் வீங்கிப் போன மதுரை வாரிசு, உள்ளூர் போலீஸ்ல புகார் தந்திருக்கார் ஓய்...
''ஆனா, போலீஸ்காரா மன்னார்குடி வாரிசு மேல வழக்கு பதியாம, கூலிப்படை மேல மட்டும் வழக்கு போட்டிருக்கா... அதுவும் இல்லாம, கூலிப்படை தலைவன் மேல இருக்கற, 10க்கும் அதிகமான குற்ற வழக்குகளை மறைச்சு, ஈசியா ஜாமின்ல வர்ற மாதிரி ஏற்பாடும் செஞ்சிருக்கா ஓய்...'' என முடித்த குப்பண்ணா, ''பிரேம் ஆத்துல கொஞ்சம் வேலை இருக்கு... ஜெய் ஆனந்த் வேற காத்துண்டு இருப்பார்...'' என்றபடியே எழ, சபை கலைந்தது.
''மாணவர்களையே கஞ்சா வியாபாரிகளா மாத்திண்டு இருக்கா ஓய்...'' என்ற அதிர்ச்சி தகவலுடன், பெஞ்சில் அமர்ந்தார் குப்பண்ணா.
''எந்த ஊருல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''கோவை மற்றும் சுத்தி இருக்கற பல காலேஜ்கள்ல, நிறைய வெளிமாநில மாணவர்கள் படிக்கறா... இவா மத்தியில, சமீபகாலமா கஞ்சா பழக்கம் அதிகமாயிடுத்து ஓய்...
''அதாவது, இந்த காலேஜ்கள்ல ஏழை மாணவர்கள் பலரை, கஞ்சா மொத்த வியாபாரிகளே, 'பீஸ்' கட்டி சேர்த்து விடறா... இவாளை வச்சே,பணக்கார மாணவர்களுக்கு காலேஜ், ஹாஸ்டல்கள்ல கஞ்சாவை விற்பனை செய்யறா ஓய்...
''நிறைய வியாபாரம் பண்ற ஏழை மாணவர்களுக்கு மொபைல் போன்கள், பைக்னு ஊக்கப்பரிசும் குடுக்கறா... இதெல்லாம், சிட்டியில இருக்கற உளவுத்துறை போலீசாருக்கு அரசல் புரசலா தெரிஞ்சும், உயர் அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு போறதில்ல...
''அதனால, 'கோவை சிட்டி போலீஸ்லயே, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க, தனியா சிறப்பு பிரிவை துவங்கணும்'னு, நேர்மையான போலீசார் சொல்றா ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''எல்லாரும் பயப்படுற அளவுக்கு, 'பவர்புல்' அதிகாரியா வலம் வர்றாங்க...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அந்தோணிசாமி.
''எந்தத் துறை அதிகாரியை சொல்றீர் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''சென்னை, பூந்தமல்லி ஏரியா கலால் துறை பெண் அதிகாரியை கண்டு, 'டாஸ்மாக்' அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை பயந்து நடுங்குறாங்க... மூணு வருஷத்துக்கும் மேல, அதே இடத்துல அவங்க இருக்கிறதால, யாரும் எதிர் கேள்வியே கேட்க முடியலைங்க...
''அதிகாரிகள் மாதா மாதம் இவ்வளவு, 'மால்' தரணும்னு, 'டார்கெட் பிக்ஸ்' பண்ணி கறாரா வசூல் வேட்டை நடத்துறாங்க... இவங்களுக்கு, மேலிடத்துல செல்வாக்கு இருக்கிறதால, டாஸ்மாக் உயர் அதிகாரிகள் கூட இவங்களிடம் பேசவே பயப்படுறாங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''ஆளுங்கட்சி மாவட்டச் செயலர் மேல, கடும் அதிருப்தியில இருக்காவ வே...'' என்றார் அண்ணாச்சி.
![]()
|
''எந்த மாவட்டத்துல பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''சென்னைக்கு பக்கத்துல இருக்கிற மாவட்டத்தின் ஆளுங்கட்சி செயலரைத் தான் சொல்லுதேன்... இவர், தனக்கு வேண்டியவங்களுக்கு, கட்சியின் பல்வேறு அணிகள்ல பொறுப்புகள் வாங்கி குடுக்காரு வே...
''அந்தப் பட்டியல்ல, கட்சிக்காக கஷ்டப்பட்டு உழைச்சவங்க, போராட்டங்கள்ல கலந்துக்கிட்டு ஜெயிலுக்கு போனவங்கன்னு யாருமே இல்லையாம்... இவரது கட்டுப்பாட்டுல இருக்கிற இரண்டு சட்டசபை தொகுதி நிர்வாகிகள் நியமனத்துல, மாற்று கட்சி கள்ல இருந்து சமீபத்துல வந்தவங்களுக்கு எல்லாம் பதவி வாங்கி குடுத்திருக்காரு வே...
''இதுக்காக, அவருக்கு கணிசமான தொகையும் கைமாறியிருக்குன்னு சொல்லுதாவ... ஒரே ஊர்ல ரெண்டு, மூணு பேருக்கு கூட, பல அணிகள்ல பதவிகள் வாங்கி குடுத்திருக்காரு... இதனால, அவர் மேல கட்சியின் உண்மையான விசுவாசி கள் எல்லாம் கடுப்புல இருக்காவ வே...'' என முடித்தார், அண்ணாச்சி.
''சந்திரரே, சூரியரே நட்சத்திர நாயகரே...' என, டீ கடை ரேடியோவில் பாடல் ஒலிக்க, சில நிமிடங்கள் ரசித்து கேட்ட பெரியவர்கள், வீட்டுக்கு புறப்பட்டனர்.