வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் பேட்டி:
வருமான வரித் துறையினரை, தி.மு.க.,வினர் தடுத்தது தேன் கூட்டில் கை வைத்தது போன்றதாகும். கவர்னர் தலையிட்டு, சி.ஆர்.பி.எப்., வீரர்களை பாதுகாப்புக்கு அனுப்ப வேண்டும். கரூர் எஸ்.பி., சுந்தரவதனம், தி.மு.க., மாவட்டச் செயலர் போல செயல்படுகிறார். பெரிய திமிங்கலங்களை வேட்டையாடுவது மத்திய அரசின் கடமை. கவர்னரும், மத்திய அரசும் இதை சாதாரணமாக விடக்கூடாது. அதிகாரிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு, முதல்வர் ஸ்டாலின், செந்தில் பாலாஜி, எஸ்.பி., பதில் சொல்ல வேண்டும்.
![]()
|
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் பேச்சு:
நமக்கான பார்லிமென்ட் நடைமுறை, பிரிட்டிஷார் வகுத்துக் கொடுத்தது என்றால், நமக்கான பார்லிமென்ட் கட்டடமும், அந்த பிரிட்டனின் காலனி ஆட்சியே கட்டிக் கொடுத்தது. 75 ஆண்டு கால உறுத்தலை துடைத்தெறிந்து, 130 கோடி இந்திய மக்களின் வரிப்பணத்தில் நிமிர்ந்து நிற்கிறது நமக்கான புதிய பார்லிமென்ட் கட்டடம் என்றால், அது உருவாவதற்கு காரணமான, பா.ஜ., அரசை பாராட்ட வேண்டும்.
நாட்டின் அடையாளமாக நிற்க போகும் புதிய கட்டடத்தை திறந்து வைத்து, மோடி வரலாற்றில் இடம் பிடிப்பதை பிடிக்காமல் தானே, எதிர்க்கட்சிகள் இந்த கூப்பாடு போடுகின்றன!
தமிழக பா.ஜ., பொருளாளர், எஸ்.ஆர்.சேகர் அறிக்கை:
அமைச்சர் செந்தில் பாலாஜி வீடுகளில், வருமானவரித் துறை சோதனை நடந்தது. அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல், தி.மு.க.,வினர் தடுத்துள்ளனர். அவர்களை ஏவிவிட்ட அமைச்சரை, முதல்வர் ஸ்டாலின் கைது செய்ய வேண்டும். மத்திய அரசு ஊழியர்களை தாக்கிய, தி.மு.க., குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். எப்போதும் போல முதல்வர் மவுனம் காப்பாரா; நடவடிக்கை எடுப்பாரா? பொறுத்திருந்து பார்ப்போம்.
உள்ளூரில் இருந்தாலே, தி.மு.க.,வினரின் களேபரங்களை முதல்வர் கண்டுக்க மாட்டார்... இப்ப ஜப்பானில் வேற இருக்கார்... கேட்கவா வேணும்!
தே.மு.தி.க., பொருளாளர் பிரேமலதா பேட்டி:
மது ஒழிப்பு என்று கூறிவிட்டு, மதுக் கடைகளை தமிழகத்திற்கு கொண்டு வந்தது கருணாநிதி தான். கஞ்சா, கள்ளச்சாராயம் என, தமிழகத்தை போதை நாடாக மாற்றி விட்டனர். எதிர்க்கட்சியாக இருந்த போது, தமிழகத்தில் தான் அதிக விதவைகள் இருப்பதாக, தி.மு.க., - எம்.பி., கனிமொழி கூறினார். இப்போது, விதவைகள் எல்லாம் சுமங்கலியாக மாறிவிட்டார்களா?
அவங்க சொல்ற கணக்கு, வழக்கெல்லாம் எதிர்க்கட்சியாக இருக்கும் போது தான்... ஆளுங்கட்சியா வந்ததும் அப்படியே, 'அந்தர் பல்டி' அடிச்சிடுவாங்க!
பா.ஜ., மாநில பொதுச் செயலர் கருப்பு முருகானந்தம் பேட்டி
: பார்லிமென்ட், சட்டசபை கட்டடங்கள் துவக்க விழாக்களில், மக்கள் பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. ஜனாதிபதிக்கு முக்கியத்துவம் கொடுப்பது குறித்து யாரும், பா.ஜ.,வுக்கு சொல்லித் தர வேண்டியதில்லை. பா.ஜ., மட்டுமே சிறுபான்மை மக்களையும், பிற்படுத்தப்பட்ட மக்களையும், ஜனாதிபதியாக்கி அழகு பார்த்துள்ளது.
தேவைக்கு தொட்டுக்கவும், வேண்டாமெனில் ஒதுக்கவும், ஜனாதிபதி, கவர்னர்களை எதிர்க்கட்சிகள் இப்ப ஊறுகாய் மாதிரி பயன்படுத்த ஆரம்பிச்்சாச்சு!
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு:
எங்கள் வீடுகளில் சோதனை நடத்திய போது, மூன்று நாட்கள் செய்தி சேனல்களில், 'லைவ்' ஓட்டினர்; தற்போது, அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் தொடர்பில் உள்ளவர்கள் வீட்டில் நடந்த, 'ரெய்டு' பற்றி, லைவ் போடவில்லை. சமூக வலைதளங்களில் ஆட்சிக்கு எதிராக கருத்து தெரிவித்தால், வழக்கு பதிவு செய்வதை இந்த அரசு வாடிக்கையாக வைத்துள்ளது.
'பழைய பங்காளி வீட்டுல, என்ன படையல் போட்டாங்கன்னு தெரியலையே' என்ற இவரது ஆதங்கம், அப்பட்டமா தெரியுது!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை
: செங்கோலில் உள்ள நந்தி சிலை மத சின்னம் என்பதால் எதிர்க்கிறோம் என்கின்றனர். இந்தியாவின் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தில், எம்பெருமான் ராமர் மற்றும் கிருஷ்ணர் உள்ளதால், அரசியலமைப்பு சட்டத்தை எதிர்ப்பீர்களா? தமிழக அரசின் சின்னம் ஸ்ரீவில்லிபுத்துார் கோவில் கோபுரம் என்பதால், தமிழகத்தை எதிர்ப்பீர்களா? இந்தியாவின் மூலை முடுக்கெல்லாம், பெரும்பான்மையோரின் நாடி நரம்புகளில் எல்லாம், ஹிந்து கலாசாரம் வேரூன்றி உள்ளது என்பதை உணர மறுப்பவர்கள் இந்தியர்களே அல்ல. பொழுது போகாமல் அவர்கள் எதிர்ப்பதால், ஆகப்போவது ஒன்றுமே இல்லை.
இவரு கடைசியா சொன்னது நுாற்றுக்கு நுாறு உண்மை... இருந்தாலும், அப்படி உதாசீனப்படுத்தாமல் எதிர்க்கட்சிகளை சமாதானம் செய்ய, பா.ஜ.,வின் மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து முயன்றது, அவர்களின் பெருந்தன்மை!
முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை:
கரூரில், வருமான வரித்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களின் வாகனங்கள் தாக்கப்பட்டதாகவும், அதிகாரிகள் கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் தஞ்சம் அடைந்திருப்பதும் அதிர்ச்சியளிக்கிறது. திரையில் நடப்பதெல்லாம் நிஜத்தில் நடந்து கொண்டிருக்கிறது. இச்செயல் கடும் கண்டனத்திற்குரியது. அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு இல்லாத நிலை இருப்பது வெட்கக்கேடானது.
![]()
|
இவரை ஆளாக்கி பார்த்த கட்சி ஆபீசையே அடித்து நொறுக்கிய, 'ஆக் ஷன்' காட்சி கூடத்தான், திரையை மிஞ்சும் அளவுக்கு இருந்துச்சு... அதுக்கு ஏதாவது பதில் உண்டா?