வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், மத்திய அரசுக்கும் இடையே தினமும் சண்டை நடக்கிறது. இந்நிலையில், மாநில நிர்வாகம் தொடர்பான வழக்கில், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ஓர் உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, 'சட்டம் - ஒழுங்கு, போலீஸ், நிலம் தவிர மற்ற அனைத்து நிர்வாகம் தொடர்பாக முடிவெடுக்க, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கே அதிகாரம் உள்ளது' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
![]()
|
இதையடுத்து, அரசு அதிகாரிகள் நியமனம் தொடர்பாக, துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் அளிக்கும் வகையில், மத்திய அரசு அவசர சட்ட மசோதாவை அமல்படுத்தியது. இதை எதிர்த்து கெஜ்ரிவால் மீண்டும் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார்.
மத்திய அரசு தனியாக ஒரு சட்டம் கொண்டு வந்தால், அதிகாரிகள் நியமனம் மற்றும் மாறுதல்களை அவர்களே செய்யலாம் என உச்ச நீதிமன்ற தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளதால், இந்த அவசர சட்டம் கொண்டு வரப்பட்டது என்கிறது மத்திய அரசு.
இதை எதிர்த்து, அரசியல் ரீதியாக போராட திட்டமிட்டுள்ள கெஜ்ரிவால், அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களை சந்தித்து அவர்களின் ஆதரவைப் பெற முடிவெடுத்திருக்கிறார். சமீபத்தில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மஹாராஷ்டிர முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, தேசியவாத காங்., தலைவர் சரத் பவார் ஆகியோரை கெஜ்ரிவால் சந்தித்த பின், அவர்கள் ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளனர்.
![]()
|
இதற்கிடையே, காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் ராகுலை சந்திக்க கெஜ்ரிவால் நேரம் கேட்டிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தரக்கூடாது என சில காங்., தலைவர்கள் சொல்கின்றனர்.
இந்நிலையில், கெஜ்ரிவால் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்திக்க உள்ளார். விரைவில் சென்னை வரும் அவர், ஸ்டாலினை சந்தித்து ராஜ்யசபாவில் இந்த மசோதாவிற்கு எதிராக ஓட்டளிக்க வேண்டுகோள் விடுக்க இருக்கிறார். தி.மு.க.,வின் கூட்டணி கட்சியான காங்., கெஜ்ரிவாலை எதிர்க்கும் போது, அக்கட்சி கெஜ்ரிவாலுக்கு ஆதரவு தருமா?
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement