புதுச்சேரி: புதுச்சேரி போலீசாருக்காக, தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் 'ஏசி' பொருத்திய ஹெல்மெட்டை தயாரித்துள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் வாகன ஓட்டிகளுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அதை கடைபிடிப்பதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டவில்லை. ஆகவே, ஹெல்மெட் அணியாதோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
போலீஸ் துறையை சேர்ந்த அனைத்து அதிகாரிகளும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.
இருந்தபோதும், இந்த கோடை காலத்தில் ஹெல்மெட் அணிவதை போலீசார் சற்று சிரமமாகவே பார்க்கின்றனர்.

இந்நிலையில், போலீசார் ெஹல்மெட் அணிவதை ஊக்குவிக்கும் வகையில் 'ஏசி' ெஹல்மெட் தரலாமா என்று அரசு ஆலோசித்து வருகிறது. தெலுங்கானாவைச் சேர்ந்த தனியார் நிறுவனம் குளிர்சாதன ஹெல்மெட்டை தயாரித்துள்ளது.
அதை உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்திடம் காண்பித்து, செயல்படும் முறைகள் குறித்து தயாரிப்பு நிறுவனத்தினர் நேரடியாக செயல் விளக்கம் அளித்தனர்.
'ஏசி' ெஹல்மெட்டை அணிந்து பார்த்த அமைச்சர் நமச்சிவாயம், 'இந்த தயாரிப்பு குறித்து பல்வேறு துறைகளின் அனுமதி தேவைப்படுகிறது. இதன் செயல்பாடுகள், நம்பகத்தன்மை உள்ளிட்டவற்றை ஆய்வு செய்த பின், போலீசாருக்கு கொடுக்க முடியுமா என்பது குறித்து ஆலோசிக்கப்படும்' என, ஹெல்மெட் தயாரிப்பு நிறுவனத்திடம் தெரிவித்தார்.