வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: சுதந்திரத்தின் போது, முன்னாள் பிரதமர் நேருவிடம் செங்கோல் அளிக்கப்பட்டது குறித்து, கடந்த 1978 ம் ஆண்டு ஆக.,15 ம் தேதி நடந்த நிகழ்ச்சியில் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் நினைவு கூர்ந்து பேசியதாக, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார். இந்த பேச்சு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
புதிய பார்லிமென்ட் திறப்பு குறித்து கடந்த புதன் (மே 24) அன்று நிருபர்களை சந்தித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டியளித்த போது, பார்லிமென்டில், செங்கோல் நிறுவப்பட உள்ளது குறித்து தெரிவித்தார்.
அப்போது, அவர் பேசியதாவது:
நம் நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகளுக்குப் பிறகும், பெரும்பாலானோருக்கு இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் பற்றி தெரியாது. ஆகஸ்ட் 14, 1947 - அன்று இரவு 10:35 மணிக்கு, ஜவஹர்லால் நேரு, தமிழ்நாட்டில் உள்ள திருவாவடுதுறை ஆதீனத்தாரிடம் இருந்து செங்கோலை பெற்றது, ஒரு சிறப்பு நிகழ்வாகும்.
நேரு, செங்கோலை பெற்ற அந்த தருணம் தான், ஆங்கிலேயர்களிடம் இருந்து அதிகாரம், நம் கைக்கு மாற்றப்பட்ட தருணம். நாம் சுதந்திரம் என்று கொண்டாடுவது, உண்மையில் இந்த தருணத்தை தான்.
இதைக் கேட்ட பின், 'இது பற்றி நமக்கு ஏன் இவ்வளவு காலமாக தெரியவில்லை' என்று நீங்கள் ஆச்சரியப்படுவீர்கள். நேருவிடம் வழங்கப்பட்ட செங்கோல், அலகாபாத்தில் உள்ள அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டது.
இந்த செங்கோல் குறித்து காஞ்சி சங்கராச்சாரியார் சந்திசேகர சரஸ்வதி சுவாமிகள்,1978 ம் ஆண்டு ஆக.,15ல் காஞ்சி மடத்தில் நடந்த விழாவில் நினைவு கூர்ந்து பேசினார். இதனை அவரது சீடர் தேவார முனைவர் சுப்பிரமணியம் என்பவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். சோழர் பாரம்பரியத்தின் வளையாத செங்கோலைப் பராமரிக்காதது குறித்தும், இதை பாடப் புத்தகத்தில் வைக்காதது குறித்தும் காஞ்சி பீடாதிபதி பரமாசாரியர் குறிப்பிட்டு உள்ளார். இவ்வாறு அமித்ஷா கூறினார்.
அமித்ஷா கூறிய இந்த தகவல், இந்தியாவிலும், தமிழகத்திலும் பலருக்கு தெரியாத தகவல். இது குறித்து அவர் பேசியது, தமிழகத்தில் உள்ள பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது. இது குறித்த வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது.