வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: இந்தியா சுதந்திரம் அடைந்து தன்னிறைவு பெற்ற பிறகும் ஆங்காங்கே ஆங்கிலேயே ஆட்சியின் அடிமைத்தன எச்சங்கள் இருக்கத்தான் செய்தன.
அவற்றில் முக்கியமானது புதுடில்லியில் இத்தனை ஆண்டுகள் பார்லிமென்ட் இயங்கி வந்த கட்டடம். வட்ட வடிவமான இக்கட்டடம் 1921ம் ஆண்டு துவங்கி 1927ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் முடிக்கப்பட்டது.

அப்போதைய வைஸ்ராய் இர்வின் திறந்து வைத்தார். (வைஸ்ராய்களையே அடிமைத்தனத்தின் அடையாளமாக ‛‛பிரபு'' என்று தான் அழைத்தோம். இர்வின் கூட, ‛‛இர்வின் பிரபு'' என்றே அழைக்கப்பட்டார்.
1950 முதல் இக்கட்டடத்தில் பார்லிமென்ட் இயங்கி வந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் இருந்த ஆங்கிலேய ஆட்சியின் பல அடையாளங்கள் மாற்றப்பட்டாலும் இந்த கட்டடம் மட்டும் மீண்டும் மீண்டும் ஆங்கிலேயர்களிடம் நாம் அடிமையாக இருந்தை நினைவுபடுத்திக்கொண்டே இருந்தது.
தற்போது மோடி தலைமையில் இருக்கும் மத்திய அரசு இந்த அடிமைத்தனத்தின் மிச்சத்தையும் மாற்ற நினைத்து, புதிய பார்லிமென்ட் கட்டடத்தை கட்ட முடிவு செய்தது. அதன்படி 28 மாதங்களில் புதிய பார்லிமென்ட் கட்டப்பட்டு இன்று (28.5.23) திறக்கப்பட்டுள்ளது.
இனியும் அடிமைத்தன அடையாளம் தேவை இல்லை!
சுதந்திர இந்தியாவாக, அனைத்து துறைகளிலும் முன்னேறிய நாடாக, வளர்ந்த நாடுகளுக்கே சவால் விடும் வளரும் நாடாக இருக்கும் நாம் இன்னமும் ஏன் காலனி ஆட்சியின் எச்சங்களையும் மிச்சங்களை சுமந்து திரிய வேண்டும் என்ற ஏக்கம் நாட்டுப்பற்று உள்ள அனைவருக்கும் இருந்தது.
ஆங்கிலேயர்கள் சூட்டிய பல ஊர்களின் பெயர்கள் மாறிவிட்டன. மெட்ராஸ், சென்னை ஆகிவிட்டது. பாம்பே மும்பை ஆகிவிட்டது. கல்கட்டா, கோல்கத்தா ஆகிவிட்டது. அலகாபாத், பிரயாக்ராஜ் ஆகிவிட்டது. பல ஊர்களில் ஆங்கில கனவான்களின் பெயர்களில் இருந்த தெருக்களின் பெயர்களும் மாற்றப்பட்டுவிட்டன.
இவையெல்லாம் மாறிய போதும் ஆங்கிலேயர் கட்டிய பார்லிமென்ட் கட்டடம் மட்டும், ‛‛நீங்கள் அடிமையாக இருந்தவர்கள் தானே '' என்பதை சொல்லாமல் சொல்லி நம்மைப் பார்த்து சிரித்தது.
இன்று முதல் அந்த அடிமைத்தன எச்சத்திற்கும் விடை கொடுத்து விட்டோம். புதிய பார்லிமென்ட் கட்டடம், நமது சுதந்திரத்தை எடுத்துக்காட்டி எட்டுத் திக்கும் கொட்டு முரசு கொட்டி ஆரவாரிக்கிறது.

சுதந்திர இந்தியா...
ஜனநாயக இந்தியா...
முன்னேறிய இந்தியா...
மற்ற நாடுகளுக்கு உதவும் இந்தியா....
யாருக்கும் அஞ்சாத இந்தியா....
உலக எதிர்காலம் எங்கள் கையில் என பறை சாற்றும் இந்தியா....
ஏழ்மையை துடைத்து ஏற்றம் பெற்ற இந்தியா....
இந்தியர் என்போம்...! இறுமாப்பு கொள்வோம்!!