இன்று 976 கோடி ரூபாய் செலவில் உருவாகிய இந்திய நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் திறக்கப்பட்டது. கடந்த இரண்டாண்டுகளாக கட்டுமானத்தில் இருந்த இந்த நாடாளுமன்றக் கட்டடம் தற்போது நிறைவு பெற்று பிரதமர் மோடியால் திறக்கப்பட்டது. இந்திய சுதந்திரத்தின்போது பாரதத்தின் முதல் பிரதமர் நேருவிடம் ஒப்படைக்கப்பட்ட செங்கோல் பிரதமர் மோடியால் நாடாளுமன்றத்தில் நிறுவப்பட்டது. இந்த செங்கோலை உருவாக்கிய ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த 97 வயதான பொற்கொல்லர் உம்மிடி எத்திராஜலு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறார். அவருக்கு நாடாளுமன்ற திறப்பு விழாவில் மரியாதை செய்யப்பட்டது. இவர் செங்கோல் குறித்துக் கூறும் அரிய தகவல்களைத் தெரிந்துகொள்வோம்.
உம்மிடி பங்காரு நகைக்கடை கலைஞர்களால் உருவாக்கப்பட்டது இந்த செங்கோல். உம்மிடி சுதாகர், உம்மிடி எத்திராஜலு உள்ளிட்டோர் தங்கள் பதின்பருவத்தில் இந்த செங்கோலை ஒரு மாத காலத்தில் உருவாக்கினர். சுதந்திரம் பெற்றதற்கான அடையாளமாக ஆதீனங்கள் பிரதமர் நேருவிடம் இந்த செங்கோலை ஒப்படைத்துள்ளனர்.
![]()
|
செங்கோல் வெள்ளியால் செய்யப்பட்டு அதன்மீது தங்க முலாம் பூசப்பட்டுள்ளது. இதனை உருவாக்க 1947 ஆம் ஆண்டில் 15 ஆயிரம் ரூபாய் செலவாகியுள்ளது. கடந்த 75 ஆண்டுகளாக இந்த செங்கோல் எங்கு வைக்கப்பட்டு இருந்தது என்றே தங்களுக்குத் தெரியாது இருந்த நிலையில், தற்போது பிரதமர் மோடி அதனை புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் வைத்து அதற்கு மரியாதை செய்துள்ளார் எனத் தெரிவித்துள்ளனர். இது தங்களது உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் எனக் கூறியுள்ளனர்.