வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: கலாசாரமும், அரசியலமைப்பும் கலந்தது தான் நமது பார்லிமென்ட் என்றும், இது காலத்தின் தேவை எனவும், இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள் எனறும், புதிய பார்லிமென்டில் பிரதமர் மோடி ஆற்றிய முதல் உரையில் குறிப்பிட்டார். தன்னிறைவு இந்தியாவின் எழுச்சிக்கு சாட்சியாக புது பார்லிமென்ட் இருக்கும் எனவும் தெரிவித்தார்.
உற்சாக வரவேற்பு

புதிய பார்லிமென்ட் இன்று( மே28) திறந்து வைக்கப்பட்டது. 2ம் கட்ட நிகழ்ச்சிகள் நண்பகல் 12: 00 மணிக்கு தேசிய கீதத்துடன் துவங்கியது. புதிய பார்லிமென்டிற்கு வந்த பிரதமர் மோடியை அமைச்சர்கள், எம்.பி.,க்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் கைதட்டியும், ' மோடி, மோடி' என கோஷம் போட்டும் வரவேற்றனர். அனைவருக்கும் வணக்கம் தெரிவித்தபடியே பிரதமர் வந்தார்.

மரியாதை
லோக்சபாவில் வைக்கப்பட்டு இருந்த சாவர்க்கர் படத்திற்கு பிரதமர் மோடி, சபாநாயகர் ஓம்பிர்லா, பாஜ., தலைவர் நட்டா உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ஆவணப்படம்
புது பார்லிமென்ட் குறித்த ஆவணப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதில், பார்லிமென்ட் கட்டுமானம், அதன் சிறப்புகள், இடம்பெற்றுள்ள தொழில்நுட்ப வசதிகள், செய்யப்பட்டுள்ள வசதிகள், செங்கோல் குறித்த விளக்கங்கள் இடம்பெற்றன.
நாணயம் வெளியீடு

புதிய பார்லிமென்ட் திறக்கப்பட்டதை முன்னிட்டு 75 ரூபாய் நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.
முதல் உரை
புதிய பார்லிமென்டில் அமைந்துள்ள லோக்சபாவில் முதல்முறையாக பிரதமர் மோடி ஆற்றிய சிறப்பு உரை:
பிரதிபலிப்பு
ஒவ்வொரு நாடுகளின் வளர்ச்சி பயணத்தில், சில தருணங்கள் முக்கியமானதாக இருக்கும். அதில், நமக்கு மே 28 ம் தேதியும் முக்கியமானது. இந்நாள் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டு இருக்கும். வரலாற்று சிறப்பு மிக்க தருணம் இது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாட்டிற்கு கிடைத்துள்ள பரிசு புதிய பார்லிமென்ட்.
புதிய பார்லிமென்ட் வெறும் கட்டடம் அல்ல. அது 140 கோடி மக்களின் எதிர்பார்ப்புகளின் பிரதிபலிக்கும் சின்னமாக உள்ளது. இந்தியாவின் உறுதி பற்றிய செய்தியை உலகிற்கு எடுத்து சொல்கிறது. இக்கட்டடம், தன்னிறைவு இந்தியாவின் எழுச்சிக்கு சாட்சியாக புது பார்லிமென்ட் இருக்கும்.
இந்தியாவின் சக்தியை இன்று மீண்டும் உலகிற்கு காட்டி உள்ளோம். வார்த்தைகளை செயல்பாட்டிற்கு கொண்டு வருவது தான் பார்லிமென்ட்.

அரசு அதிகார மாற்றத்திற்கான அடையாளம், புனித சின்னமாகவும் செங்கோல். செங்கோல், நீதி நேர்மை தேசப்பற்றை பிரதிபலிக்கிறது. புனிதமான செங்கோல் தற்போது லோக்சபாவில் நிறுவப்பட்டுள்ளது. செங்கோலை மிகுந்த மதிப்போடு வணங்குகிறேன்.
செங்கோல், கடமையின் பாதையில் செல்ல வேண்டும் என்பதற்கான அடையாளம். தமிழகத்தில் இருந்து வந்து ஆசி வழங்கி, செங்கோலை வழங்கிய ஆதீனங்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். அவர்கள் முன்பு தலைவணங்குகிறேன்.
சோழ மரபில் இருந்து ராஜபாதையின் அடையாளமாக செங்கோல் திகழ்கிறது செங்கோலின் கவுரவத்தை மீண்டும் பறைசாற்றுவோம். தமிழகத்தின் செங்கோல் நம் அனைவருக்கும் தொடர்ந்து ஊக்கம் அளித்து கொண்டிருக்கும்.
சோழர் காலத்தில், நீதி நல்லாட்சியின் அடையாளமாக செங்கோல் இருந்தது. ஒவ்வொரு முறையும் பார்லிமென்ட் கூடும் போது, நமக்கு உத்வேகம் அளிக்கும். தற்போது சரியான இடத்தில் செங்கோல் வைக்கப்பட்டு உள்ளது.
புதிய உயரத்தை நோக்கி

ஜனநாயகம் என்பது ஒரு அமைப்பு மட்டுமல்ல. மாண்பு. ஜனநாயகத்தின் தாயாக இந்தியா திகழ்கிறது. உலகத்தின் ஜனநாயகத்திற்கும் அடிப்படையாக உள்ளது. ஜனநாயகம், நமது கொள்கையாகவும் பாரம்பரியமாகவும் உள்ளது.
நமது அரசியலமைப்பு சட்டம் தான் நமது வலிமை. புதிய பார்லிமென்ட், கலாசாரம் மற்றும் அரசியலமைப்பு சட்டம் ஆகியவை இணைந்ததாக உள்ளது. நாட்டின் பாரம்பரியம் மற்றும் பண்பாட்டை காக்க வேண்டும். முயற்சியை தொடரும் போது முன்னேற்றமும் தொடரும். உலக நாடுகள் இந்தியாவை மிகுந்த மரியாதையுடன் பார்த்து வருகின்றன. இந்தியா முன்னேறி செல்லும் போது, உலகமும் முன்னேறும். புதிய பார்லிமென்ட், இந்தியாவின் வளர்ச்சி மூலம் உலகத்தின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். இந்தியாவுடன், உலகத்தின் முன்னேற்றத்திற்கும் பங்களிக்கும்.
75 ஆண்டு சுதந்திர இந்தியா பல்வேறு சவால்களை கடந்து வந்துள்ளது. புதிய உயரத்தை நோக்கி நகர்ந்து வருகிறோம்.
பறைசாற்றல்
காலத்திற்கு ஏற்றவாறு நம்மை தகவமைத்து கொள்ள வேண்டும்.பல ஆண்டுகால அந்நிய ஆட்சி, நமது பெருமையை நம்மிடம் இருந்து பறித்தது. இன்றைய இந்தியா, அந்த காலனித்துவ மனநிலையை விட்டு சென்றுவிட்டது. சோழர் மற்றும் முகலாயர் காலத்து கட்டட கலைகள் வெளிநாட்டவர்களை ஈர்க்கும் வகையில் உள்ளது.
இந்தியாவின் வளர்ச்சி மற்றும் குறிக்கோளை நிறைவேற்ற புதுமைகளை படைக்க வேண்டும். நாட்டின் வலிமையை புதிய பார்லிமென்ட் பறைசாற்றுகிறது. ஒரே இந்தியா வலிமையான இந்தியா என்பதையும், நாட்டின் தேசிய சின்னங்களையும் பிரதிபலிக்கிறது.
காலத்தின் தேவை
புதிய பார்லிமென்ட் காலத்தின் தேவை. புதிய பார்லிமென்ட், 21ம் நூற்றாண்டில் இந்தியா முன்னிலையில் உள்ளது. புதிய தேசத்தின் அடையாளமாக புதிய பார்லிமென்ட் உள்ளது.
புதிய பார்லிமென்ட் நவீன வசதிகள் மற்றும் நவீன தொழில்நுட்ப சாதனங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இதன் மூலம் 60 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. அவர்களின் கடின உழைப்பை போற்றும் வகையில், உலகிலேயே இல்லாத வகையில் டிஜிட்டல் கேலரி அமைக்கப்பட்டு உள்ளது.
ஏழைகளுக்காக
பல ஆண்டுகளாக புதிய பார்லிமென்டிற்கு தேவை இருந்தது. வரும் காலங்களில், எம்.பி.,க்கள் மற்றும் இருக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கும் சூழல் உள்ளது. இதனால், தற்போதைய நேரத்தில் புதிய பார்லிமென்ட் தேவையானதாக அமைந்துள்ளது. புதிய பார்லிமென்ட் கட்டப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. 4 கோடி ஏழை மக்களுக்கும் கடந்த 9 ஆண்டுகளில் வீடுகள் மற்றும் 11 கோடி கழிப்பறைகள் கட்டிக் கொடுக்கப்பட்டது எனக்கு திருப்தி அளிக்கிறது.
புதிய பார்லிமென்டில் நவீன வசதிகள் பேசும்போது, நாட்டில் உள்ள கிராமங்களை இணைக்கும் வகையில் 4 லட்சம் கி.மீ., சாலைகளை அமைத்துள்ளோம். மஹாத்மா காந்தியின் ஒத்துறையாமை இயக்கம், மக்களிடம் எழுச்சியை கொடுத்தது. இந்தியா 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது, வளர்ச்சியடைந்த நாடாக இருக்கும். நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல எம்.பி.,க்கள் பாடுபட வேண்டும் இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.