You can get angry with Shiva... | சிவனிடம் கோபம் கொள்ளலாம்...| Dinamalar

சிறப்பு பகுதிகள்

சத்குருவின் ஆனந்த அலை

சிவனிடம் கோபம் கொள்ளலாம்...

Added : மே 28, 2023 | |
கைலாஷ் யாத்திரைத் தொடரில் இந்த வாரம், "பக்தனாக வளராத நான் கைலாஷுக்கு மட்டும் எப்படி பக்தனாக வர முடியும்? ஏன் கைலாஷுக்குச் செல்கிறோம்?" போன்ற கேள்விகளுக்கு சத்குருவின் மெய்சிலிர்க்கச் செய்யும் பதில்கள் இடம் பெறுகின்றன.கைலாஷ் யாத்ரா - பகுதி 4டாக்டர்.ராதா மாதவி:ஆதிகுரு சிவபெருமான் குடிகொண்டுள்ள இடமாகப் போற்றப்படும் கைலாஷுக்கு வெகு அருகே, சத்குருவுடன் குருபூர்ணிமா
You can get angry with Shiva...  சிவனிடம் கோபம் கொள்ளலாம்...

கைலாஷ் யாத்திரைத் தொடரில் இந்த வாரம், "பக்தனாக வளராத நான் கைலாஷுக்கு மட்டும் எப்படி பக்தனாக வர முடியும்? ஏன் கைலாஷுக்குச் செல்கிறோம்?" போன்ற கேள்விகளுக்கு சத்குருவின் மெய்சிலிர்க்கச் செய்யும் பதில்கள் இடம் பெறுகின்றன.

கைலாஷ் யாத்ரா - பகுதி 4

டாக்டர்.ராதா மாதவி:

ஆதிகுரு சிவபெருமான் குடிகொண்டுள்ள இடமாகப் போற்றப்படும் கைலாஷுக்கு வெகு அருகே, சத்குருவுடன் குருபூர்ணிமா நாளை அனுபவிக்கும் அரிய வாய்ப்பும் பயணத்தின் இடையே வந்தது.

நாங்கள், சாகா என்ற இடத்தை வந்தடைந்தோம். அங்கே மலைகள் பலவிதங்களில் இருப்பதைக் கண்டு ரசித்தோம். பசுமையே இல்லாமல் பாறைகளாய்... மண்வண்ணமாய்... பாதி பசுமையும் மீதி பனியும் மூடிய முகடுகளாய்... முற்றிலும் பனி மூடியதாய் என எல்லாமே பிரம்மாண்டம்.

கைலாஷுக்கு மிக அருகே 5000 மீட்டர் உயரத்தில் இருக்கும்போது, உடலின் தன்மையும், சீதோஷ்ணமும், அங்கிருக்கும் சூழ்நிலையும், மிகவும் வித்தியாசமானது. எனவே, ஒவ்வொருவரும் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் என்று சத்குரு வலியுறுத்தினார்.

சாகாவில் நடந்த சத்சங்கத்தில் கைலாஷைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளும்விதமாய், பங்கேற்பாளர்கள் சிலரின் கேள்விகளுக்கு சத்குரு பதிலளித்தார்.

“சத்குரு! முன்பு ஒருமுறை பேசும்போது கைலாஷுக்கு ஒரு பக்தனாக வர வேண்டும் என்று சொன்னீர்கள். நான் ஒரு பக்தனாக வளர்க்கப்படவில்லை, என்ன செய்வது?” என்று ஒரு பங்கேற்பாளர் கேட்டபோது, சத்குரு பக்தியின் தன்மையை அழகாய் விவரித்தார்.

“எதன் மீது பக்தி என்பதெல்லாம் முக்கியமில்லை. நீங்கள் பக்தியாய் இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். நீங்கள் சிவ பக்தராகத்தான் வர வேண்டும் என்றில்லை. உங்களுக்கு வேறு எதன் மீதாவது அல்லது யார் மீதாவது ஆழமான பக்தியோ அல்லது காதலோ உண்டா?'' என்று கேள்வி கேட்டவரை சத்குரு கேட்டார். அதற்கு அந்த பங்கேற்பாளர், “இயேசுபிரான் மீது பக்தி உண்டு” என்றார்.
“அப்படியானால் கைலாஷ் மலையை, இயேசுவாகப் பாருங்கள். எது உங்களுக்கு உயர்ந்ததாகப் படுகிறதோ, அதுவாகவே இந்த மலையைப் பாருங்கள், போதும். பக்தி தானாய் வரும்.

இந்த கைலாஷ் மலையை இயேசுவாகப் பார்த்தாலும் சரி, சிவனாகப் பார்த்தாலும் சரி, கல்லாகப் பார்த்தாலும் சரி... அது முக்கியமானது அல்ல. உங்களிடம் பக்தியைத் தூண்டியது எதுவோ, அது முக்கியமில்லை. நீங்கள் பக்தியோடு இருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

பக்தி என்றால் உங்களிடம் உள்ள உணர்ச்சிப் பரிமாணம் உச்சம் கொண்டுள்ளது என்று அர்த்தம். உடல், மனம், உணர்ச்சி, சக்தி இந்த நான்கில் உணர்ச்சி மட்டுமே சுலபமாய் வெடித்தெழும் விஷயம். உணர்ச்சி மட்டுமே மிகத் தீவிரமான எல்லைகளைத் தொடக்கூடியது. சக்தி நிலையின் தீவிரத்தை எட்ட நீண்ட கால ஆத்ம சாதனைகளும் அருளும் வேண்டும். இல்லாவிடில் அது சாத்தியம் இல்லை.

பக்தி என்று நாம் சொல்வதெல்லாம் உணர்ச்சி நிலையின் உச்சத்தை எட்டும் வழியைத்தான். கோபம் என்ற உணர்ச்சியும்கூட அப்படிப்பட்டதுதான். உங்கள் கோபத்தைத் தீவிரமாக 24 மணிநேரத்துக்கு நீட்டித்துப் பாருங்கள். நீங்கள் ஞானோதயம் அடைந்துவிடுவீர்கள். உங்கள் கோபம் ஒரு நாளும் தீவிரமாக 24 மணி நேரமும் இருந்ததில்லை. கோபம் அவ்வப்போது வருகிறது, போகிறது. ஆனால், 24 மணி நேரமும் இருந்ததில்லை.

எனவே, கைலாஷை இயேசுவின் பக்தராகவும் நெருங்கலாம், சிவனின் மீது கோபம் கொண்டும் நெருங்கலாம். இரண்டுமே அருமையான வழிகள்தான். இரண்டு வழிகளும் வேலை செய்யும்.'' அடுத்த பங்கேற்பாளர் கேட்ட கேள்வி, பயணத்தில் பங்கேற்ற பலரின் மனதிலும் ஒட்டியிருந்த கேள்வி.
“கைலாஷுக்கு நாம் ஏன் வந்தோம்?''

புன்னகையுடன் தொடர்ந்தது சத்குருவின் பதில்... “ஆன்மீக வளர்ச்சியைத் தேடி நாம் இங்கே பயணிக்கவில்லை. இங்கே எப்படிப்பட்ட செயல்கள் ஒரு சிலரால் செய்யப்பட்டிருக்கின்றன என்பதைக் காணவே வந்திருக்கிறோம். இது ஒரு ஆன்மீக நூலகத்துக்குச் செல்வது போலத்தான். இங்கிருக்கும் ஒரு சில நாட்களில் நாம் எவ்வளவு படிக்கவிருக்கிறோம் என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

முக்திக்காகவோ, பாவங்களைக் கழுவுவதற்காகவோ, நாம் இங்கே வரவில்லை. உங்கள் சக்தியைப் பெரும் அதிர்வுக்கு உங்களால் கொண்டுசெல்ல முடிந்தால், பல லட்சம் ஜென்மங்களின் முட்டாள் தனங்களை உலுக்கித் தள்ளிவிட முடியும். என்னோடு அமர்ந்து என் சக்தி நிலையின் அதிர்வோடு ஒன்றினால், எல்லா முட்டாள்தனங்களையும் உதறிவிட முடியும். மானசரோவரில் மூழ்கி எழத் தேவையே இல்லை” என்று அவர் சொன்னபோது, உயிரே சிலிர்த்ததை உணர்ந்தோம்!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X